தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்!

தென்னிந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி நகர். குளிர்ந்த காலநிலை, எழில் கொஞ்சும் இயற்கையின் பேரழகு, ஏராளமான சுற்றுலா தலங்கள் என தனித்துவம் வாய்ந்த ஊட்டியை ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். கோடை சீசன் மற்றும் செகெண்டு சீசன்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுவதைப் போன்றே தொடர் விடுமுறை நாள்களிலும் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

ஊட்டி படகு இல்ல ஏரி

விஜயதசமி, ஆயுதபூஜை மற்றும் தசரா என நாடு முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாடி மகிழும் நோக்கில் குடும்பமாகவும், நண்பர்கள் குழுவுடன் ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி, தொட்டபெட்டா, பைக்காரா , மலை ரயில் என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளின் வருகையால் தங்கும் விடுதிகள் முதல் நடைபாதையோர வணிகர்கள் வரை மகிழ்ச்சியில் இருந்தாலும் மலைப்பாதைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை , ஊட்டி – கூடலூர் சாலை என அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசலால் நேற்று மாலை போக்குவரத்து முடங்கியதால், மக்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.-

போக்குவரத்து நெரிசல்

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று மாலை ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிவித்த வாகன ஓட்டுநர்கள், “5 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் போக வேண்டிய பலரும் ரோட்டிலேயே காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என தெரிந்தும் எந்தவித முன்னேற்பாட்டையும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. போக்குவரத்தை சீர் செய்ய போலீஸாரும் அக்கறை காட்டவில்லை” என புலம்பினர்.

போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிவித்த மாவட்ட அதிகாரிகள், ” குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சில இடங்களில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சமாளிக்க கோத்தகிரி வழியாக வாகனங்களை அனுப்பி வைத்தோம்” என்றனர்.