புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, புதுக்கோட்டை பால்பண்ணை அருகே உள்ள வரத்து கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தவர்கள், பெரியார் நகர் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அதிக மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் செல்லக்கூடிய அளவிற்கு தோரணை வாய்க்கால்கள், மரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
“வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி வருகிறோம். இதில், ஆளுங்கட்சியின் தலையீடு எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தால் எங்களிடம் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘ஆளுநரிடம் மோதல் போக்கு வேண்டாம்’ என முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சரிடம் வேண்டுமானால் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு தெரியாது. அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்த தகவல் அடிப்படையில் கருத்து கேட்கிறீர்கள். திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும். அதனை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அவ்வாறு இருந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.