உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து உத்தரப்பிரதேச இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தோல்வியை தழுவியது.
இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில் காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருந்த புல்பூர், மஜ்ஹவன் போன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இடம் பெற்று இருந்தனர். காங்கிரஸ் 5 தொகுதிகளை கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் மொத்தமுள்ள 10 தொகுதியில் 6 தொகுதிக்கு அகிலேஷ் யாதவ் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். கேத்ஹரி, கர்ஹல், மில்கிபூர், மீராப்பூர், காஜியாபாத், மஜ்ஹவன், சிசாமுவ், கெய்ர், புல்பூர், குந்தர்கி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சிசாமுவ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.தண்டிக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 4 தொகுதியில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்களும், 3 தொகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது குறித்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில்,”ஹரியானா தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லாததால் எங்கள் கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள் ஏமாற்றம் அடைவது இயற்கைதான். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கொடூர ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உத்தரப்பிரதேச இடைத்தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் அதற்கு தீர்வு காணப்படும். இது பெரிய பிரச்னை கிடையாது”என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் இது குறித்து கூறுகையில்,”இடைத்தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். ஆனால் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கேட்ட இரண்டு தொகுதிகள் உட்பட 6 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாடி திட்டமிட்டுள்ளது. ஹரியானாவில் அதிகப்படியான நம்பிக்கை காரணமாகவே தோற்றோம்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றுகிறோம். காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் சேர்ந்து பா.ஜ.கவை எதிர்த்து வெற்றி பெறும். காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் இரண்டு கட்சிகளின் நோக்கம்”என்றார். காங்கிரஸ் கட்சிக்கு மீராப்பூர் மற்றும் கெய்ர் தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி ஒதுக்கும் என்று தெரிகிறது. இத்தொகுதியில் இதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதோடு தற்போது இருக்கும் கூட்டணியில் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாது என்று அகிலேஷ் யாதவ் நினைப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb