Ratan Tata: “ரத்தன் டாடா-வுக்கு பின் இவரா?” – யார் இந்த நோயல் டாடா?!

‘இனி யார் டாடா அறக்கட்டளையின் தலைவர்?’ என்ற கேள்வி, தற்போது ரத்தன் டாடாவின் மறைவையொட்டி எழுந்தியிருக்கிறது.

சமூக உணர்வு

டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்ட்டர்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, ரத்தன் டாடா ‘உலக பணக்கார பட்டியலில்’ இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அவரது ‘சமூக உணர்வு’.

வெள்ளம் தொடங்கி கொரோனா வரை எந்த பேரிடர் வந்தாலும், டாடா குழுமத்தின் உதவி இல்லாமல் இருக்கவே இருக்காது. இந்த உதவிகள் ‘டாடா அறக்கட்டளை’ மூலம் நடந்தேறி வருகிறது. டாடா குழுமத்தில் பல அறக்கட்டளைகள் இருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குங்கள் இந்த அறக்கட்டளையுடையது… அந்தப் பங்குகளை வைத்து தான் இந்த அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. இதற்கு, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை வைத்துள்ளது நல்ல சான்றாகும்.

Tata: அடுத்து யார்?

அடுத்து யார்?

இதுவரை இந்த அறக்கட்டளைகளின் தலைவராக ரத்தன் டாடா இருந்தார். ‘தனக்கு பின் யார்?’ என்று அவர் யாரையும் குறிப்பிடாததால், தற்போது அந்த நபரை டாடா அறக்கட்டளையின் 13 அறங்காவலர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

2022-ம் ஆண்டு டாடா குழுமத்தில், டாடா சன்ஸ் தலைவர், டாடா அறக்கட்டளைகள் தலைவர் என இரு பதவியாக பிரிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை, ஒருவரே கூட இரு பதவிகளிலும் இருக்கலாம். அப்படி இருந்த கடைசி தலைவர் ரத்தன் டாடா தான். 2017-ம் ஆண்டு ரத்தன் டாடா தனது ஓய்வை அறிவிப்பதற்கு முன்பு வரை, அவர் தான் இரண்டிலுமே தலைவராக இருந்தார். ஆனால், அந்த அறிவிப்புக்கு பிறகு, தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரசேகரன் டாடா சன்ஸின் தலைவராக ஆனார். ரத்தன் டாடா அறக்கட்டளையில் மட்டும் தலைவராக தொடர்ந்தார்.

டாடா குடும்பம் மட்டுமே!

2022-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் படி, தற்போது சந்திரசேகரனே டாடா சன்ஸின் தலைவராக தொடர்வார். டாடா அறக்கட்டளையின் தலைவர் பதவிக்கு மட்டும் வேறோரு நபர் பொறுப்பேற்பார். இதுவரை, டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர்கள் டாடா குடும்பத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன்படி, அதன் அடுத்த தலைவராக நோயல் டாடா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

யார் இந்த Noel Tata?

யார் இந்த நோயல் டாடா?

நோயல் டாடா ரத்தன் டாடாவின் தம்பி ஆவார். இவருக்கு வயது 67.

நோயல் டாடா முதன்முதலாக டாடா சர்வதேச நிறுவனத்தில் தான் தன் பணியை தொடங்கினார். 1999-ம் ஆண்டில் டிரண்ட் (Trent) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். ஆடை விற்பனை கடைகளில் இப்போது பெரிய அளவில் இருக்கும் வெஸ்ட்சைடை லாபகரமானதாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

2003-ம் ஆண்டு இவர் டைட்டன் மற்றும் வோல்டாஸின் இயக்குனர் ஆனார்.

இந்த நிலையில், 2011-ம் ஆண்டு ‘தனக்கு பிறகு சைரஸ் மிஸ்ட்ரி’ என்று ரத்தன் டாடா அறிவித்தார். ஆனால், 2016-ம் ஆண்டில் சைரஸ் மிஸ்ரா டாடா சன்ஸின் தலைவராக நீக்கப்பட்டு, மீண்டும் ரத்தன் டாடாவே தலைவரானார்.

2017-ம் ஆண்டு இவர் தான் டாடா சன்ஸின் அடுத்த தலைவர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இவருக்கு போதுமான அனுபவம் இல்லாததால் சந்திரசேகரன் தலைவர் ஆனார்.

டாடா அறக்கட்டளையில் இவரும் ஒரு அறங்காவலர் ஆவார். டாடா குழுமத்தில் இவருக்கு நல்ல பெயர் உண்டு. மேலும் டாடா குழும அறக்கட்டளைகளில் இவரது முக்கிய பங்களிப்புகளால் நிச்சயம் இவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.