மதுரை வண்டியூர் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “மக்கள் பேராதரவோடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜனநாயக முறையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி உறுப்பினர்களை இலக்கு வைத்து சேர்க்கை நடைபெறுகிறது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.
ரயில் விபத்தில்…
ரயில் விபத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தை தமிழ்நாட்டில் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். திமுகவும் கூட்டணி கட்சியினரும் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள், அதுபற்றி திமுக கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க ரயில் விபத்தில் நாடகமாடி கொண்டுள்ளனர்.
10 ஆண்டுகளில் ரயில்வே துறை பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, புல்லட் ரயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ரயில் நிலையங்களுக்கு ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.
என்ஐஏ விசாரணை
ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரித்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என இந்தியா கூட்டணி ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர்.
மெரினா நிகழ்ச்சியின்போது என்ன நடவடிக்கை எடுத்தார்களா? மெட்ரோ ரயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் ஆம்புலன்ஸ் இல்லாமல் ஐந்துபேர் இறந்தார்கள்.
நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரயில்வே விபத்து குறித்து என்ஐஏ விசாரித்து உண்மையை கொண்டு வருவார்கள்.
திமுகவின் ஆட்சி..
பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தியுள்ள திமுகவின் ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. மதுக்கடைகளை மூடுவோம் என சொல்லிவிட்டு அதிகமாக திறந்திருக்கிறார்கள் எங்கு பார்த்தாலும் மனமகிழ் மன்றங்களாக உள்ளன. அவை அனைத்தும் திமுகவினரின் மனமகிழ் மன்றங்களாக இருக்கிறது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் கூட போதைப் பொருள்கள் போய் சேர்ந்துள்ளது. போதைப் பொருள்களை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் பழைய பேருந்துகளை எடுத்துவிட்டு மின்சார பேருந்துகளை நடைமுறைப்படுத்துங்கள் என மத்திய அரசு பலமுறை கூறியும் தமிழக அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விஜய் தொலைநோக்கு பார்வையோடு..
விஜய், 27 ஆம் தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு கொள்கைகளை பொறுத்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை. பாஜக எதிர்கால திட்டமிடலோடு செயல்படும் கட்சி. அது போல தொலைநோக்கு பார்வையோடு விஜய் இருக்கிறாரா என்பது குறித்து அவர் நடத்தும் மாநாட்டின் மூலம் தெரிய வரும்.
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது குறித்து மக்கள் கேள்வி கேட்டார்கள், நானும் கேள்வி கேட்டேன். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய் எப்படி பொதுவானவராக இருப்பார் என மக்கள் மத்தியில் கேள்வி வந்தது. அதனால் விஜய் ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது.
சூழலைப் பொறுத்து கூட்டணி குறித்து தேசியத் தலைமை முடிவெடுக்கும். அண்ணாமலை வாரத்திற்கு இரண்டு முறை கட்சி நிர்வாகிகளோடு பேசி வருகிறார். லண்டனில் படித்தாலும் தமிழகத்தில் கட்சிப் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.”என்றார்.