இந்திய தொழில்துறையின் முன்னோடிகளில் ஒருவரான ரத்தன் டாடா சமீபத்தில் மறைந்தார். அவரின் மறைவுக்குப் பின், அவர் குறித்த பல செய்திகளைப் பதிவிட்டு மக்கள் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது `வெல்கம்’ என ஒரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பி கொல்கத்தாவில் இருந்து வெளியேறிய டாடா நானோ தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதுகுறித்துப் பார்ப்போம்.
2008ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து 2010ம் ஆண்டு டாடா நானோ தொழிற்சாலை தொடக்க விழாவில் பிரதமர் மோடி இவ்வாறு பேசினார், “கொல்கத்தாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரத்தன் டாடா மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாகச் சொன்னபோது, நான் அவருக்கு ‘வெல்கம்’ என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ஒரு ரூபாய் எஸ்.எம்.எஸ்-ஆல் என்ன செய்ய முடிகிறது எனப் பார்க்கிறீர்கள்” என்று பேசினார்.
டாடா நிறுவனம் மேற்கு வங்கம் சிங்கூரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக திரிணாமுல் கங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.
இடதுசாரி அரசாங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்ஜி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. 2006ம் ஆண்டு முதல் நடந்த போராட்டங்களால் டாடா நிறுவனம் மேற்கு வங்கத்தில் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. டாடா நிறுவனமும் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறியது.
2008 அக்டோபர் 3-ம் தேதி ரத்தன் டாடா மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாள்களிலேயே, டாடா நிறுவனம் குஜராத்தின் சனந்த் பகுதிக்கு இடம் மாறுவது உறுதியானது. தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
குஜராத் அரசின் செயல் குறித்து நெகிழ்ந்த டாடா, “நாங்கள் நானோ தயாரிப்புக்கு மாற்று இடத்தைத் தேடியபோது, எங்களுக்கு அமைதியான மற்றும் இணக்கமான இடம் தேவைப்பட்டது. நமக்குத் தேவையானவற்றை உத்தரவாதம் செய்வதில் யாரையும் விட, குஜராத் தனித்து நின்றது. பிரதமர் மோடி என்னிடம், ‘இது டாடாவின் திட்டம் அல்ல, நமது திட்டம்’ எனக் கூறினார். எங்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை, மற்றும் ஆதரவுக்காக நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்றுப் பேசினார்.பெறும் நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட டாடா நானோ தொழிற்சாலை துரதிர்ஷ்டவசமாக 2018-ல் மூடப்பட்டது. கடந்த புதன் கிழமை (09.10.2024) ரத்தன் டாடா மறைந்ததையடுத்து அவர் குறித்த நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சிங்கூரில் டாடா ஆலையை அமைக்க பலத்த எதிர்ப்புகள் எழுந்தது. டாடா நிறுவனத்துக்காக இடதுசாரி அரசு வளமான விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது. இதனால் எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன.
அதுவரை 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அதன் கடிவாளத்தை இழந்தது. 2011ம் ஆண்டு இடதுசாரி கட்சிகளை வீழ்த்தி மம்தா பானர்ஜி அரசு ஆட்சியைக் கைப்பற்றியது.
அதுவரை 997 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டிருந்தது. ‘இந்த நிலம் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது’ என உச்ச நீதிமன்றம் 2016ம் ஆண்டு அளித்த தீர்ப்பை முன்னிட்டு விவசாயிகளுக்கு நிலம் திரும்பிக்கொடுக்கப்பட்டது.