“8 மாதங்களில் 15,000 பேருக்கு டெங்கு பாதிப்பு” – அதிமுக மருத்துவ அணி எச்சரிக்கை..!

“பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவது மட்டும் அரசின் கடமை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை  ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்து மருத்துவ முகாம்களையும் விழிப்புணர்வு பிரசாரத்தையும் நடத்த வேண்டும்” என்று அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுகாதாரத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் பருவமழை காலங்களில், மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்களை அந்தந்த பகுதியில் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டும், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் தானே, நீலம், மடி, வர்தா, ஓக்கி, கஜா, நிவர் போன்ற புயல் பேரிடர்களின்போது தொற்றுநோய் பரவாமல் இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 2022 ,2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக எடுக்காமல் இருந்ததால், பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

டாக்டர் சரவணன்

டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது..

தற்போது டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூவர், தேனி ,மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 மாதத்தில் மட்டும் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தாலும், அரசின் கணக்கை விட இன்னும் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் அதிக பாதிப்பு..

டெங்குவால் ஏழு பேர் பலியாகி உள்ளனர், பொதுவாக டெங்கு கொசு என்பது ஒரே நேரத்தில் ஆறு பேரை கடித்து பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது அந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக வழக்கம் போல பத்திரிகை செய்தியை அரசு வெளியிட்டுள்ளது, குறிப்பாக இதுபோன்ற காலங்களில் எலி காய்ச்சல், காலரா, டைபாய்டு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகமாக பரவும்.

வெள்ளை அறிக்கை வேண்டும்..

இதுபோன்ற காலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்று அரசு வெள்ளை அறிக்கை விடவேண்டும், மேலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால் அந்தத் தேங்கிய மழைநீரில் இருந்து உருவாகும் கொசுக்கள் மூலம் காய்ச்சல் அதிகமாக பரவும், அதேபோல் குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு அதன் மூலம் காலரா போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் கவனம்..

தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கூடங்கள் தொடங்கிவிட்டன. தனியார் பள்ளிகளில் போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக முழுவதுமுள்ள 58,879 அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தி, அங்கே மழை நீர் தேங்காமலும், மருத்துவ முகாம்களையும் நடத்திட வேண்டும்.

டெங்கு | Dengue fever

கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள்..

தமிழக முழுவதுமுள்ள12,524 கிராம ஊராட்சிப் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் உருவாக்கப்பட்டது. இது போன்ற காலங்களில் கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைத்தது. அரசியல் காழ்புணர்ச்சிகாரணமாக அதை நிறுத்திவிட்டனர். ஆகவே கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும்.

எப்போதும் போல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி பேட்டி கொடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்து தகுந்த மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திட வேண்டும். வழக்கம்போல அறிக்கை மட்டும் வெளியிட்டு கும்பகர்ணனைப்போல அரசு தூங்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.