Nihon Hidankyo: அணுகுண்டு தாக்குதலில் மீண்டு, அமைதியை வலியுறுத்திய ஜப்பான் அமைப்புக்கு நோபல் பரிசு!

பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, கடந்த 7ம் தேதி துவங்கியது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களின் அமைப்பான நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா (Hiroshima), நாகசாகி தாக்குதல்

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுவந்தபோது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று ஜப்பானில் உள்ள  ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மூன்று நாள்கள் கழித்து மீண்டும் ஜப்பானின் நாகசாகி மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இதில் பெரும் இழப்பை சந்தித்த ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

ஜப்பானில், குண்டு வெடிப்பில் இருந்தது தப்பி உயிர்பிழைத்தவர்கள் 1956 ஆம் ஆண்டு `நிஹான் ஹிடான்கியோ’ என்ற  அமைப்பை உருவாக்கினார்கள். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவிற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து நிஹான் ஹிடான்கியோ அமைப்பு தன்னுடைய பணிகளை தொடங்கியது. அணு ஆயுதங்களால் ஏற்பட்ட இழப்பு, வலியை உணர்ந்த இவர்கள், இனி உலகில் எங்கும் இத்தகைய சம்பவங்கள் நிகழ கூடாது என்று செயல்பட்டனர்.

அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்களை பகிர்ந்து அமைதியை வலியுறுத்தி வந்தனர்.

நிஹான் ஹிடான்கியோ அமைப்பின் இணைத் தலைவர் தோஷியுகி மிமாக்கி

இந்நிலையில், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்காக முயற்சி செய்ததற்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியதற்காகவும் இந்த குழுவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து நார்வே நோபல் கமிட்டி அதன் அறிக்கையில்,”சுமார் 80 ஆண்டுகளாக போரில் எந்த ஒரு அணு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. நிஹான் ஹிடான்கியோ அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இதற்கு முக்கிய பங்காற்றி உள்ளனர். அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்கும் அவர்களது பணியை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுகிறது”  என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்புக்கு விருதுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.