முரசொலி செல்வத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் கலைஞர் கருணாநதியின் மருமகனுமான முரசொலி செல்வம் பெங்களூருவில் நேற்று இயற்கை எய்தினார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
பெங்களூருவில் வசித்து வந்த முரசொலி செல்வம் கலைஞரின் மகளான செல்வியின் கணவர். இவரின் உடல் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் உடலைக் கண்டு மனமுடைந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண் கலங்கியிருந்தனர். அதை தொடர்ந்து அவருடனான நினைவுகள் குறித்து இருவரும் அவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். முக்கியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை – கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்.” என உருக்கமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேற்று இரவு அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இவரை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், வைகோ எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.