சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமைக்காகவும் போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தமுஎகச தனது செம்மார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏற்பதாக ஒப்புக்கொண்டு தொழில் தொடங்கிய சாம்சங் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதைச் சகித்துக்கொள்ளவே முடியாத நெருக்கடியில் தொழிலாளர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாம்சங்கின் சட்ட மீறலையும் தொழிலாளர் விரோதப் போக்கையும் தடுக்கத்தவறிய தமிழ்நாடு அரசும் தொழிலாளர் நலத்துறையும், தற்போது சாம்சங் நிறுவனத்தின் தரப்பாகவே மாறிவிட்டனவோ என்று ஐயுறும் வகையில் போராடும் தொழிலாளர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவிவருவது கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சுமுகத்தீர்வு காணப்போவதாகச் சொல்லிக்கொண்டு வந்த அமைச்சர்கள் குழு, போராடும் பெரும்பான்மையான தொழிலாளர்களின் பிரதிநிதிகளை ஒதுக்கிவைத்துவிட்டு நிர்வாகத்தின் நலனுக்காக நிர்வாகமே உருவாக்கி வைத்துள்ள சிறு குழு ஒன்றுடன் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தி முடித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி அவர்களின் கூட்டுப்பேர வலுவை உடைக்கும் சாம்சங் நிர்வாகத்தின் இந்த இழிமுயற்சிக்கு அமைச்சர்கள் குழு உடந்தையாகியிருக்க வேண்டியதில்லை. கெடுநிலையாக, சங்கத்திற்கு அங்கீகாரம் என்பதைத் தவிரத் தொழிலாளர்களின் மற்ற கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுவிட்டதாக அறிவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தியது அமைச்சர்கள் குழு. அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்படி சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு நிர்வாகத்தைத் தள்ளுவதற்குப் பதிலாக நிர்வாகம் சொன்னதை அறிவிக்கும் நிலைக்குச் சென்றதன் மூலம் அமைச்சர்கள் குழு நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
அமைச்சர்கள் குழுவின் அறிவிப்பை ஏற்காத பெரும்பான்மையான தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடரும் நிலையில் அவர்களையும் அவர்களுக்கு ஆதரவான தொழிற்சங்கத் தலைவர்களையும் காவல்துறை வேட்டையாடும் விதம் அவசரநிலைக் காலத்தை நினைவூட்டுகிறது. நீதிமன்றம் தலையிட்ட பிறகும்கூட ஒடுக்குமுறையை நிறுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு சாம்சங் விசுவாசத்தில் மூழ்கியுள்ள காவல் துறையைத் தமிழ்நாடு அரசு மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் அரசின் ஒப்புதலுடனேயே இத்தகைய மனிதவுரிமை மீறல்கள் நடந்ததாகக் கருதப்படும்.
இதுவன்றி, “ட்ரோல் மீடியா” கும்பலை வைத்து மாற்றுக்கருத்தாளர்களைச் சிறுமைப்படுத்தும் சங் பரிவாரத்தின் உத்தியை இரவல் பெறும் நிலைக்குத் தாழ்ந்துள்ள சிலர் சாம்சங்கிற்கு எதிரான போராட்டத்தைத் தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் என்பதாக மடைமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனிமித்தம், போராடும் தொழிலாளர்கள் பற்றியும் தொழிற்சங்க இயக்கம் பற்றியும் கம்யூனிசம் பற்றியும் சமூக ஊடகங்களில் நொதித்துவழியும் அவதூறுகள் நூற்றாண்டு கால குப்பைகள்.
இவற்றினாலெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமும் மனவுறுதியும் மழுங்கிவிடாது என தமுஎகச உறுதியாக நம்புகிறது. அன்னிய முதலீட்டாளர்களிடம் சமரசமின்றி தம் சொந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” எனக் கோரப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb