Samsung Protest: தொழிலாளர்கள் கைது, போராட்டத்துக்கு நெருக்கடி… திமுக அரசின் அணுகுமுறை சரிதானா?

தொழிற்சங்கத்துக்கு அனுமதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்துக்கு மேலாக சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது என அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் அறிவித்தார்கள். இது போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தொழிலார்களை கொதிப்படைய செய்தது. “பெரும்பான்மை தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் சிஐடியு தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சாம்சங் நிர்வாகம் மறுத்துவிட்டது.

Samsung Employees Strike

அதேநேரத்தில் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படும் சங்கத்துடன் போலியான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். அதில் சொற்ப எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு தமிழக அமைச்சர்களும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்” என கடுமையாக சிஐடியு கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் அரசு தரப்பு சூடானது.

அதன் பிறகுதான் காவல்துறையினரின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக சொல்கிறார்கள். “நாங்கள் 30 நாட்களாக போராடிய இடத்தில் இருந்த பந்தலைப் பிரித்தார்கள். நள்ளிரவில் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீட்டில் புகுந்து அவர்களைக் கைது செய்தார்கள். இதில் ஏழு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பிற தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்” என்றனர். ஆனால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. பந்தல் பிரிக்கப்பட்ட காலியிடத்தில் அமர்ந்து வழக்கம்போல போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது காவல்துறைக்கும் தொழிலார்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டனர்.

Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்

இந்த தகவல் வெளியானதையடுத்து சிஐடியு தலைவர் சவுந்தரராசன் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. மதியம் 12 மணியளவில் தொழிலாளர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தார்கள். அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தார்கள். அங்கு நேரடியாக சென்ற கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராசன், “இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது காவல்துறை எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிக் கொடுமைப்படுத்தியதோ… அதே போன்றே காவல்துறை இப்போது நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக தொழிலாளர்களை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது” என்றார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்… போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்” என தெரிவித்துள்ளார். “அமைதியான வழியில் போராடுகிற தொழிலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது.

Samsung Employees Strike

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று காரணம் காட்டாமல் அரசு நேரடியாக முடிவெடுக்க முடியும். அப்படி முடிவு எடுத்தால் அந்த வழக்கு செயலிழந்து போகும். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு, பதிவாளர் என்கிற பொறுப்பு இருக்கிற ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. ஒரு சங்கத்தை பதிவு செய்வது சட்டபூர்வமானது. அதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம். இதுதான் இங்கே பிரச்சனையின் மூலமாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் இருக்கிற இந்த தயக்கத்தை தவிர்த்து அல்லது தேக்கத்தை உடைத்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன்வர வேண்டும். 17 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காததே ஒரு அடக்குமுறைதான்” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜி.செல்வா, “பல தொழிலார்கள் 18 ஆண்டுகளாக சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். இதையடுத்து சாம்சங் தொழிலார் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்குகிறார்கள். பிறகு அந்த சங்கத்தை பதிவு செய்வதற்காக தொழிலாளர் ஆணையத்திடம் விண்ணப்பிக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகள் 4 மணிநேரத்தில் அந்த வேலையை முடித்துவிடலாம். இதற்கு சாம்சங் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் 100 நாட்களுக்கு மேலாகியும் சங்கத்தை பதவு செய்யவில்லை. இதையடுத்துதான் தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கு தொழிலாளர் ஆணையம் ஏன் சங்கத்தை பதிவு செய்யவில்லை என்கிற கேள்வியைத்தான் முன்வைத்திருக்கிறார்கள்.

ஜி.செல்வா

சங்கத்தை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமல் சிஐடியு பிரச்னை செய்வதாக போலியான கருத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அது சரியான நடவடிக்கை இல்லை. மேலும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியாட்கள் சங்கத்தில் இருக்கக் கூடாது என்கிறார். ஆனால் குறிப்பிட்ட சதவீதம் வெளியாட்கள் சங்கத்தில் இருக்கலாம் என சொல்கிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தி.மு.க-வின் தொ.மு.ச சங்கத்துக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு இந்த விஷயத்தில் மட்டும் சட்டம் சொல்வதை ஏன் தமிழக அரசு செய்யவில்லை” என கொதித்தார்.