`முல்லைப்பெரியாறு அணைக்காகப் போராடுவது அதிமுக மட்டுமே..’ – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

தேனி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்து சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கம்பம் எம்எல்ஏ-வுமான ஜக்கையன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது, “சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், வான்வெளி நிகழ்வில் உயிரிழப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடக்கியுள்ளது” என்றார்.

தொடர்ந்து, “தென்தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் திமுக அரசு உரிய தீர்வு காணவில்லை. முல்லைப்பெரியாறு அணைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டம் மட்டுமன்றி மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருவது அதிமுக மட்டுமே.

ஆர்.பி.உதயகுமார்

எனவே எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் வெற்றிக்காகவும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று இப்போதிருந்தே அதிமுக-வினர் உழைக்க வேண்டும். மக்களிடம் சென்று திமுக ஆட்சியின் அவலம் மற்றும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூற வேண்டும்” என்றார்.