தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும், மறைந்த முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முரசொலி மாறன் டெல்லி அரசியலில் ஈடுபடத் தொடங்கியது முதலே முரசொலி நாளிதழ் ஆசிரியர் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கிய செல்வம், தமிழகத்தில் திமுக எதிர்கட்சி வரிசையிலிருந்த காலங்களிலெல்லாம் பல வழக்குகளை எதிர்கொண்டு சிறையும் சென்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் ஊழியர் சுப்பிரமணிய பிள்ளையின் திடீர் மரணம் தொடர்பான கட்டுரைக்குச் சிறை சென்றது, ஜெயலலிதா ஆட்சியில் சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளைப் பிரசுரித்தார் என சட்டசபையிலேயே கூண்டில் ஏற்றப்பட்டது என இவர் சந்தித்த பல பிரச்னைகளை தற்போது நினைவு கூர்கின்றனர் திமுகவினர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை விடுங்கள், கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராகவும், தயாநிதி மாறன் மத்தியில் அமைச்சராகவும் இருந்த நாட்களிலும் கூட செல்வம் நீதிமன்றக் கூண்டில் ஏறினார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த சம்பவமும் ஒரு நாள் நடந்தது.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் செல்வத்தைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியான வார இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. தூத்துக்குடி பகுதியில் பிரபலமானவராகத் திகழ்ந்த வெங்கடேசப் பண்ணையார் சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பான கட்டுரையை அப்போது அந்த இதழில் நிருபராக இருந்த நான் எழுதியிருந்தேன். என்கவுன்ட்டரில் கேரளாவைச் சேர்ந்த ஒரு முக்கிய நபருக்குத் தொடர்பிருப்பதாக நீண்ட அந்தக் கட்டுரைக்கு எதிராக கேரள நீதிமன்றத்தை நாடினார் அந்தக் கேரளப் புள்ளி.
மேற்படி நபரின் நோட்டீஸ், அதற்கு வார இதழ் தரப்பிலிருந்து தரப்பட்ட பதில், எல்லாம் கடந்து மறு வருடம் ஜூலை மாதம் கைது வாரன்ட் வரை சென்று விட்டது அந்த வழக்கு.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து இதழ் அலுவலகத்துக்கு வந்த காவலர் ‘என்ன ஏதுனு பார்த்து முடிங்க சார், எங்க தலை உருண்டுடப் போகுது’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.
உடனே, அரெஸ்ட் வாரன்ட்டில் குறிப்பிட்டிருந்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டது. ஜூலை 12ம் தேதி குருவாயூர் அருகேயிருக்கும் பெரிந்தல்மண்ணா என்கிற நகரத்துக்கு நானும் புகைப்படக்காரர் கண்ணனும் சென்று விட்டோம்.
செல்வத்தின் குடும்பத் தொலைக்காட்சியான சூர்யா தொலைக்காட்சியிலிருந்து வந்தவர்கள் மறு நாள் கோர்ட்டில் ஆஜராகும் நிமிடம் வரை எங்களை பார்த்துக் கொண்டனர்.
ஜூலை 13, காலை அந்த கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது. கேரளாவின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் எங்களுக்காக வந்திருந்தனர்.,
சரியாக கோர்ட் தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து வந்து சேர்ந்தார் முரசொலி செல்வம். அறிமுகமானதும், ‘எல்லாம் சரியாப் போயிட்டிருக்கில்லையா, ஏதும் பிரச்னை இல்லையே’ என விசாரித்து விட்டு,’அரசியல் கட்டுரைகளுக்கெதிரா இந்த மாதிரி வழக்குகள் வர்றதுலயும் அரசியல் இருக்கும். ஆனாலும் எழுதறப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும் தம்பி’ என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் நீதிமன்றத்துக்குள் நீதிபதி வர, நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றார் செல்வம்.
தொடர்ந்து நானும் புகைப்படக்காரரும் அடுத்தடுத்து கூண்டிலேறி எங்கள் வழக்கறிஞர்கள் கூறியபடியே எங்கள் பதிலை முன்வைத்து விட்டு இறங்கினோம்.
விசாரணையின் முடிவில், பிறப்பிக்கப்பட்ட வாரன்ட்டை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தன.
கிளம்பும் போதும், ’தம்பிங்க ரெண்டு பேரும் சென்னை கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டீங்களா, அவங்களை பத்திரமா அனுப்பி விடுங்க’ என சூர்யா டிவி ஊழியர்களிடம் சொல்லி விட்டே சென்றார்.
மாநிலத்திலும் மத்தியிலும் திமுக அதிகாரத்திலிருந்த போதும் நீதிமன்றக் கூண்டில் முரசொலி செல்வம் ஏறி நின்றது அநேகமாக இது ஒன்றாகத்தான் இருக்கும்.
பிறகு, விசாரணையின் முடிவில் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் முடிந்து போனது.