மகாராஷ்டிரா: முன்னறிவிப்பின்றி அமைச்சரவை எடுத்த 38 முடிவுகள்… அதிருப்தியில் வெளியேறிய அஜித் பவார்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக மகாராஷ்டிரா அரசு அடுத்தடுத்து நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இத்திட்டங்களால் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. மாநிலத்தின் நிதியமைச்சரும், துணை முதல்வருமான அஜித் பவாரும் புதுப்புது திட்டங்களை அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சரவை கூட்டத்தில் மேலும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாத புதிய திட்டங்கள் எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு வந்த பிறகுதான் நிதியமைச்சர் அஜித் பவாருக்கு இது குறித்து தெரிய வந்தது. இதனால் அதிருப்தியடைந்த அஜித் பவார் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஏக்நாத் ஷிண்டே

ஆனால் அவர் சென்ற பிறகு அமைச்சரவை கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. இக்கூட்டத்தில் மொத்தம் 38 முடிவுகள் எடுக்கப்பட்டது. 7 சாதிகளை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதன் மூலம் அச்சாதியினரின் வாக்குகளை பெற முடியும் என்று மகாராஷ்டிரா அரசு கருதுகிறது. மும்பை மால்வானி, மலாடு பகுதியில் தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட 140 ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயர் பிரிவில் வராதவர்களுக்கான வருமான உச்ச வரம்பை 8 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக அறிவிக்கவேண்டும் என்றும், மதராஸா பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தவிர புதிய வாரியங்கள் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் இது வரை அதிக பட்சமாக 14 லட்சம் வரை மட்டுமே கிராஜுவிட்டி(கருணைத்தொகை) பெற முடியும் என்ற நிலை இருந்தது. அதனை 20 லட்சமாக அதிகரித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய திடீர் நடவடிக்கைகளால் அஜித் பவார் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.