LPG: வேலைநிறுத்தத்தை அறிவித்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள்; சங்கத்தின் கோரிக்கைகள் என்ன?

தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள் வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்டிரைக் அறிவிப்பு

சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தீபாவளி போனஸ் 12 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு, ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இண்டேன், ஹெச்.பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் சிலிண்டர் டெலிவரிமேன், மெக்கானிக், டிரைவர், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன், அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்க அறிவித்துள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமென் தொழிலாளர்கள் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக அன்றைய தினம் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இது குறித்து அனைத்து எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்  பேசும்போது “எல்.பி.ஜி சிலிண்டர் நிறுவனங்கள், ஏஜென்சிகளின் கீழ் சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

எல்.பி.ஜி டெலிவரிமேன் ஸ்டிரைக்

இந்த ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை. இது தொடர்பாக எல்.பி.ஜி. நிறுவனத்திடம் கேட்டால் ஏஜென்சியிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், ஏஜென்சிகள் சிலரை மட்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என அடையாளம் காட்டி அவர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கிவிட்டு, ஏராளமான தொழிலாளர்களுக்கு வெறும் சீருடைகளை மட்டும் வழங்கி ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் ஏராளமான தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது. இது குறித்து கேஸ் ஏஜென்சிகளிடம் கேட்டால் பணிக்கு வர வேண்டாம் என மிரட்டுகின்றனர். இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தத் தொழிலாளர்களின் நலன் கருதி எங்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அக்டோபர் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம்.” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb