2019 ஆம் ஆண்டில் நிர்பயா வழக்கைப் போல இந்தியாவையே உலுக்கிய இன்னொரு சம்பவம் நடந்திருந்தது. தெலுங்கானாவின் தொண்டுப்பள்ளி என்கிற இடத்திலுள்ள சுங்கச்சாவடி அருகே மாலை 6 மணியளவில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு டாக்ஸி பிடித்து தன்னுடைய க்ளினிக்குக்கு செல்கிறார் தீஷா என்கிற அந்த 26 வயது பெண் கால்நடை மருத்துவர். பணிகளை முடித்துவிட்டு மீண்டும் 9 மணிக்குச் சுங்கச்சாவடி அருகே ஸ்கூட்டரை எடுக்க வருகிறார். ஸ்கூட்டரின் பின்பக்க சக்கரம் பஞ்சர் ஆகியிருப்பதை அறிந்து என்ன செய்யலாம் என யோசனையில் நிற்கிறார்.
அருகே லாரியை நிறுத்தி விட்டுத் தங்கியிருந்த நால்வர் கூட்டம் தீஷாவுக்கு உதவி செய்வதாக வருகிறது. இதன்பிறகு நடந்ததுதான் கொடுமை. அந்த நால்வர் கும்பல் தீஷாவை வன்கொடுமை செய்து கொன்று அருகே இருக்கும் பாலத்துக்குக் கீழே அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார்கள்.
நவம்பர் 27 ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் மறுநாள் செய்தியாகிறது. தெலுங்கானாவைத் தாண்டி இந்தியா முழுவதையும் இந்த சம்பவம் அதிரச் செய்கிறது. தெலுங்கானாவில் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கிக் கொந்தளித்தனர். அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் எனப் பலரும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்து காவல்துறை மீது அழுத்தம் ஏற்றினர். உணர்ச்சிப் பெருக்கத்தோடு அத்தனை தரப்பினரும் காவல்துறை மீது பாய்ந்தனர்.
காவல்துறையும் களத்தில் இறங்கியது. அதி விரைவான விசாரணையில், சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஆரிஃப், சென்னகேசவலு, நவீன், சிவா என இந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக நால்வரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மக்களின் உணர்ச்சிப்பெருக்கு இன்னும் வேகமெடுத்தது. நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட இந்த நால்வரையும் மக்கள் கூட்டம் தாக்கும் முயற்சியிலெல்லாம் ஈடுபட்டது. நீதிமன்றத்தில் அவர்களை 10 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறை விசாரிக்கிறது.
டிசம்பர் 6 ஆம் தேதி குற்றம் நடந்த இடத்துக்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறை முடிவு செய்கிறது. கொலை நடந்த அந்த இடத்தில் காவல்துறையினர் சூழ, இந்த நான்கு பேரும் நிற்கிறார்கள். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. இந்த நால்வரும் காவல்துறையைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கக் கணநேரத்தில் திட்டமிடுகின்றனர்.
கீழேயிருக்கும் மண்ணை அள்ளி காவல்துறையினரின் முகத்தில் வீசுகின்றனர். சிவாவும் நவீனும் அருகிலிருந்த கட்டைகளையும் கற்களையும் கொண்டு காவல்துறை மீது கொடூரமாகத் தாக்குகின்றனர். இதில் அரவிந்த், வெங்கடேஷ்வரலு என்கிற இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து சரிந்து விழுந்தனர். மற்ற 8 காவலர்களும் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவே இல்லை. காவலர்கள் சுதாரிப்பதற்குள்ளேயே ஆரிஃப்பும் சென்னகேசவலும் அடிபட்டுச் சரிந்து விழுந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். இதில் தவறுதலாக அவர்களின் கூட்டாளிகளான நவீன் மற்றும் சிவாவின் மீதுமே குண்டை பாய்ச்சி விடுகின்றனர். காவலர்களுக்கு வேறு வழியே தெரியவில்லை. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஆரிஃப்பையும் சென்னகேசவலுவையும் என்கவுன்ட்டர் செய்துவிடுகிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்களால் தாக்கப்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஒரே வாரத்தில் அதிவிரைவாகத் தண்டனை வழங்கிவிட்டதாக மக்கள் காவல்துறையைக் கொண்டாடித் தீர்த்தனர். என்கவுன்ட்டர் செய்த ஐ.பி.எஸ் வி.சி சஜன்னார் தலைமையிலான காவலர்களை மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஊரே கொண்டாட்டமானது.
ஆனால், சில நாட்களிலேயே தெலுங்கானா நீதிமன்றத்தில் இந்த என்கவுன்ட்டரில் காவல்துறையின் நடவடிக்கை சார்ந்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. மனித உரிமை ஆணையமும் நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் இந்த என்கவுன்ட்டர் முறையான காரணங்களுக்காகத்தான் நிகழ்த்தப்பட்டதா என்பதை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சார்புர்கர் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதில் முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரும் அங்கம் வகித்தனர்.
விசாரணை ஆணையம் களத்தில் இறங்கி அங்குலம் அங்குலமாக இந்த என்கவுன்ட்டரை பற்றியும் அதில் சம்பந்தப்பட்டிருந்தவர்களைப் பற்றியும் விசாரித்தது. விசாரணையின் முடிவில் சார்புர்கர் தலைமையிலான அந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. அடுக்கடுக்கான சில ஆதாரங்களைக் குறிப்பிட்டு காவல்துறை செய்தது போலி என்கவுன்ட்டர் என்பதை நிறுவியது.
காவல்துறை என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சமயத்தில் களத்தில் நிகழ்ந்ததாகச் சொன்ன அத்தனையும் பொய் என விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தியது.
மண்ணை அள்ளி காவலர்களின் மீது வீசி அந்த நால்வரும் தப்பிக்க முயன்றதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், சம்பவம் நடந்த அந்த இடத்தில் புற்கள் மண்டி இருக்கிறது. அங்கே ஒருவரின் முகத்தில் மண்ணை வீசி திசைதிருப்பும் அளவுக்கு மண்ணை அள்ள வேண்டுமெனில் சில நொடிகளாவது பிடிக்கும். 10 காவலர்கள் சூழ நிற்கும் நால்வருக்கு அந்த அவகாசமெல்லாம் அங்கே இருந்திருக்காது. மேலும், அவர்கள் மண்ணை அள்ளியிருந்தால் அவர்களின் கையில் மண் அப்பிய கறை இருந்திருக்கும். பிரேதசப் பரிசோதனையில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. மேலும் காவல்துறையின் சீருடையிலும் மண் அள்ளி வீசப்பட்டதற்கான தடயம் இல்லை.
மேலும் அரவிந்த், வெங்கடேஷ்வரலு என்கிற காவலர்கள் இருவரும் இவர்கள் தாக்கியதில் சரிந்து விழுந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அவ்வளவு பெரிய காயமெல்லாம் இல்லை. அவர்களின் சீருடையிலெல்லாம் இரத்தம் தோய்ந்திருந்தாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அப்படி சீருடையில் இரத்தம் தோய்ந்ததற்கான ஆதாரமும் இல்லை. மேலும் முன்னுக்குப் பின் முரணாகத் தலையில் ஏற்பட்டிருந்த காயத்தின் அளவையும் மாற்றி மாற்றி அதிகமாகப் பதிந்து சான்றிதழ் வாங்கியிருந்ததும் தெரியவந்தது.
காவலர்களின் துப்பாக்கியைப் பறித்துச் சுட்டார்கள் என்றும் கூறியிருந்தார்கள் அல்லவா. ஆனால், காவல்துறையின் துப்பாக்கியை இவர்கள் எடுத்திருந்தாலும் பயிற்சி பெறாதவர்கள் அதை அவ்வளவு எளிதில் இயக்கிவிட முடியாது. மேலும், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நால்வருமே சரியாக இடுப்புக்கு மேலாக உடனடியாக இறப்பை எட்டும் வகையில் அபாயகரமாகச் சுடப்பட்டிருக்கிறார்கள். அது போகத் தோட்டாக்கள் அவர்களது உடலின் முன்பக்கத்தைத் துளைத்துத்தான் பின்பக்கமாக வெளியேறியிருக்கிறது. இதனால் அவர்கள் தப்பிச் செல்ல முயல்கையில் சுடப்பட்டதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது.
இதில் முக்கியமான இன்னொரு விஷயம் அந்த நால்வரில் ஆரிஃப்பை தவிர மற்ற மூவரும் 18 வயதை எட்டாத சிறுவர்கள். காவல்துறையினர் அந்த மூவரும் படித்த பள்ளிக்கெல்லாம் சென்று விசாரித்திருக்கிறார்கள். அதன்மூலம், அந்த மூவரும் 18 வயதுக்குக் கீழானவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். சிறார்கள் என்பதை அறிந்த பிறகும் சட்டத்துக்குப் புறம்பாக என்கவுன்ட்டர் செய்திருக்கிறார்கள்.
இப்படியான பல ஆதாரங்களையும் அடுக்கி காவல்துறை செய்தது போலி என்கவுன்ட்டர் என்பதை விசாரணை ஆணையம் தீர்க்கமாகக் கூறியது. சட்டத்தை மீறி கொலையில் ஈடுபட்ட காவலர்கள் மீது FIR பதிய வேண்டும் என்கிற வழக்கு இப்போது தெலுங்கானா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. போலி என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவலர்கள் தனியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை வாங்கியிருக்கின்றனர்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலி என்கவுன்ட்டர்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கதை. ஒரு என்கவுன்ட்டரை செய்துவிட்ட காவல்துறை எப்படியெல்லாம் கதை கட்டும் என்பதை ரொம்பவே தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வரும் சில காட்சிகள் தீஷா வழக்கையும், அதைத் தொடர்ந்து நடந்த என்கவுன்ட்டரையும் நினைவூட்டுகின்றன. என்கவுன்ட்டர்கள் மனித உரிமை மீறல் என்பதையும் கல்வி மற்றும் நீதித்துறையினால் மட்டுமே ‘Extra Judiciary Killing’ க்கு ஆதரவான மக்களின் மனநிலையை மாற்ற முடியும் என்பதை ஆழமாகப் பேசியிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் பெருகி வரும் என்கவுன்ட்டர் சம்பவங்களையும் தீஷா வழக்கு போன்றவற்றின் பின்னாலிருந்து வெளிவரும் உண்மைகளையும் பார்க்கும்போது வேட்டையன் படத்தின் ஒரு வசனம்தான் மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஒலிக்கிறது.
‘அநீதியை நீதியால்தான் வெல்ல முடியுமே தவிர இன்னொரு அநீதியால் அல்ல!’
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs