“மது ஒழிப்பு மாநாட்டு மேடையில், நீங்க பேசும் போது, `மாநாட்டின் நோக்கத்தை கொள்கை பகைவர்கள் சிதைத்து விட்டார்கள்’ அப்படிங்கிற ஒரு ஸ்டேட்மென்ட்ட சொல்லி இருந்தீங்க. மாநாடு அதன் நோக்கத்தை அடையவில்லை என்ற உங்களின் வருத்தத்தின் வெளிப்பாடாக இதை பார்க்கலாமா?”
“என்ன நோக்கத்திற்காக நாங்கள் மாநாட்டை அறிவித்தோமோ, அந்த நோக்கம் குறித்த உரையாடல்கள் இங்கே நடைபெறவில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பித்து தேர்தல் அரசியலோடு கூட்டணி அரசியலோடு இணைத்து பல்வேறு யூகங்களை உரையாடல்களாக மாற்றி விட்டார்கள். குறிப்பாக அதிமுக-வும் பங்கேற்கலாம் என்று சொன்னவுடன், `திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேறப்போகிறார். அதிமுக-வுக்கு அழைப்பு விடுக்கிறார்’, போன்றவையே பேசுப்பொருளாக மாறிவிட்டது. மதுவை ஒழிக்க வேண்டும், போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டினுடைய நோக்கம். மதுவை ஒழிக்க முடியுமா? முடியாதா? மது ஒழிப்பு தொடர்பான போராட்டம் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்தது? அது வெற்றிகரமாக முடிந்ததா தோல்வியில் முடிந்ததா? இது பற்றி அல்லவா விவாதித்திருக்க வேண்டும்.
மாநில அரசுக்குரிய கடமையா அல்லது இந்திய ஒன்றிய அரசுக்கும் இதிலே பொறுப்பு இருக்கிறதா? விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஒன்றிய அரசுக்கும் பொறுப்பு இருப்பதாக சொல்லுவது சரியா? தவறா? இது குறித்து விவாதம் நடந்திருக்க வேண்டும். மது ஒழிப்பை ஏன் வலியுறுத்த வேண்டும். மது ஒழிப்பு என்பதும் கள்ளச்சாராய ஒழிப்பு என்பதும் ஒன்றா? கள்ளச்சாராய ஒழிப்பு வேறு மது ஒழிப்பு என்பது வேறு. இப்ப கள்ளச்சாராயம்னா என்ன மது ஒழிப்புன்னா என்ன? இது தொடர்பான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். இது போன்று எதுவுமே நடக்காமல் திருமாவளவன் வருகிற தேர்தலில் வேற அணி மாறப்போறாரு. அதுக்காகத்தான் இப்ப இந்த மாதிரி பேசினார். திமுக கூட்டணிக்கு அவர் நெருக்கடி தருகிறார். இப்படி விவாதங்கள் மாறிவிட்டன. அதனாலதான் நான் அதை சொன்னேன். `கொள்கை பகைவர்கள் மாநாட்டின் நோக்கத்தை மடைமாற்றம் செய்துவிட்டார்கள்’ என்று.
நாங்கள் என்ன நோக்கத்துக்காக மாநாட்டை ஒருங்கிணைத்தோமோ அந்த நோக்கத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. ரொம்ப சரியா மக்களை அணி திரட்டி வெற்றிகரமாக இந்த மாநாட்டை நாங்க முடித்திருக்கிறோம். அதனால மாநாட்டைப் பொறுத்தவரையில் வெற்றிகரமாக அமைந்தது. சிறப்பாக அமைந்தது.
பலரின் கவனத்தையும் பரவலான கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மாநாட்டுக்குப் பிறகும் கூட மாநாட்டில் என்ன பேசினோம் என்ன கோரிக்கைகளை வைத்தோம் என்ன தீர்மானங்களை நிறைவேற்றினோம் அந்த தீர்மானங்களில் எது எது சரியானவை அல்லது சாத்திய கூறுகள் அற்றவை என்பது குறித்து விவாதித்திருக்க வேண்டும். அப்படிவிவாதிக்காமல் மாநாட்டுக்கு பிறகு, `ராஜாஜிக்கு ஏன் கட் அவுட் வச்சாரு? அப்புறம் எதுக்கு திமுக பிரதிநிதி வந்து அதுல உட்கார்ந்தாங்க? மாநாட்டுல சொல்ல வேண்டியதை திருமாவளன் சொல்லாம விட்டுட்டாரு’ இந்த மாதிரி மறுபடியும் ஒரு திசை திருப்புகிற மடைமாற்றம் செய்கிற ஒரு விவாதமாகத்தான் தமிழ்நாட்டு அரசியல் களங்களில், ஊடகத்தளங்களில் விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசுக்கு ஒரு சில கோரிக்கைகள். பெரும்பான்மையாக மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள். அதிகமா தமிழ்நாட்டினுடைய தமிழ்நாடு அரசுக்குரிய கடமைகளை சொல்லி இருந்தோம். திமுக பிரதிநிதிகளை வச்சுக்கிட்டு இவங்களால இதெல்லாம் பேச முடியுமா? அப்படின்னு முதல்ல கேட்டாங்க. நான் திமுக பிரதிநிதிகளை வச்சுக்கிட்டு தான் நாங்க இதெல்லாம் பேசினோம்.
திமுக பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் எப்படி மது விற்பனை கூடிக்கிட்டு இருக்குங்கிற டேட்டாவை சொன்னோம். போதை பொருள் புழக்கம் எப்படி இருக்குங்கிறதை சொன்னோம். ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது, போதை பொருள் கைப்பற்றப்பட்டது. கொக்கைன் கைப்பற்றப்பட்டது எவ்வளவு வழக்குகள் ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு வழக்குகள் கூடுதலாக பெருகிக்கொண்டே இருக்கிறது.
இதையெல்லாம் நாங்க பேசி இருக்கிறோம். ஒரு மேலோட்டமா நீங்க வந்து போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துங்கள் அப்படி என்று முடிக்கவில்லை. தமிழ்நாடு அரசு இன்னும் உறுதி காட்டணும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றோம். அப்போ ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சி பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது உட்பட அந்த தீர்மானத்தை நாங்க சொல்லி இருக்கிறோம். நாளுக்கு நாள் பெருகிறது என்று சொன்னால் கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை அப்படிங்கறது உட்பட நாங்கள் வலியுறுத்தி பேசியிருக்கிறோம். மாநாட்டுக்கு முன்பும் சரி மாநாட்டுக்கு பின்பும் சரி இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம் என்னவோ அந்த நோக்கத்தைப் பற்றி அவர்கள் பெரிதாக பேசாமல் திரும்பத் திரும்ப அரசியலோடு பொருத்தி திசை திருப்பி அதனுடைய வலிமையை அல்லது வீரியத்தை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன்.”
“திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, இந்த கொள்கையை எடுக்கும்போதும், நீங்க மாநாட்டுக்கு அதிமுக மற்றும் பொதுவான சக்திகளுக்கு அழைப்பை விடுக்கும் போதும் இந்த புள்ளியில தான் போய் நிற்கும் என்பதை நீங்கள் முன் கூட்டியே கணிக்க முடியும் தானே?”
“கள்ளச்சாராயத்தில் 69 பேர் இறந்தபோது, அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் போதே இந்த மாதிரியான முரண்கள் எழும் என்பது தெரியும். இந்த முரண்கள் எழாமல் நாம் வந்து களத்தில் நிற்க முடியாது. பேசாமலே இருந்தால் முரண்கள் எழாது. அதற்காக நம்ம பேசாம இருக்க முடியுமா? பேசி தான் ஆக வேண்டும். இப்ப 69 பேர் கள்ளச்சாராயத்தில் இறந்தது, மே மாதத்தில்.
எல்லாரும் அதை படிச்சாங்க கடந்து போயிட்டாங்க. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அந்த 69 பேர் பலியான அந்த நிகழ்வை இன்னும் உயிரோட்டமா வைத்துக் கொண்டிருக்கிறோம். அதை தான் இந்த மாநாடு உணர்த்துகிறது. இப்ப இந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தி இருக்கணும். திமுக ஆட்சியில் 69 பேர் பலி. அப்போது வேகமா யார் பாய்ந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தான். நாங்கள் கூட்டணி கட்சியில் இருக்கிறோம். ஆனால் அதிமுக கூட இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் இதை வந்து பெரிய ஒரு டூலா(tool) கையில் எடுத்திருக்கணும். ஏன் எடுக்கவில்லை?.”
“உங்களில் அழைப்பை கூட அவர்கள் பரிசீலிக்காத நிலை தான் உள்ளதா?”
“`நாங்க ஒரு பெரிய சக்தி. நாங்க கூப்பிட்டா எல்லாம் வந்துருவாங்க. அப்படி நான் சொல்லவில்லை. என்னுடைய உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இது ஒரு பொதுவான பிரச்னை என்பதை முதல்ல எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்… அதுதான் என்னுடைய கோரிக்கை. ஆனால், ஹெச்.ராஜா மாதிரி ஆட்கள் இவர் என்ன பெரிய தலைவர்? அப்படின்னு வயிறு எரிஞ்சு பேசுகிறார். அவர் வயிறு எரியக்கூடிய அளவுக்கு நான் ஒன்னும் வளரவில்லை. ஆனால் அவருடைய வயிற்று எரிச்சல் எப்படி இருக்கு பாருங்க.
அதாவது என்னுடைய நோக்கம் என்பது எல்லோருக்குமான பொதுவான பிரச்னை. எல்லோரும் ஒன்னு சேர்ந்து குரல் கொடுப்போம் அப்படிங்கறதுதான் என்னுடைய அறைகூவல். இதில் மாறுபட்டு நிற்க வேண்டாம். கட்சி பார்க்க வேண்டாம் எல்லாம் ஒன்னா சேர்ந்து குரல் கொடுப்போம் என்று சொன்னால், எல்லாரும் என் மேடைக்கு வா என்று அர்த்தம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து பேசி இருக்கலாம். திருமாவளவன் சொல்றது சரி, அந்த கோரிக்கை சரி, ஆமா மது கடையில மூடுங்கன்னு எல்லாரும் சொல்லி இருந்தா கவர்மெண்ட்க்கு ஒரு நெருக்கடி வரும் என்பது தான்.
ஆனால், `திருமாவளவன் ஏதோ கால்குலேஷன் போடுறாரு, இவரு இங்க இருந்து அங்க ஷிஃப்ட் ஆக போறாரு, அங்க இருந்து இங்க ஷிஃப்ட் ஆக போறாரு அல்லது இங்க உள்ள இருந்துகிட்டே பிரஷர் கொடுக்க போறாரு’ அப்படிங்கறது ஒரு அருவருப்பான கற்பிதம். இது ஒரு அநாகரிகமான கற்பிதம்.
நான் மற்ற அரசியல்வாதி போல் இருந்திருந்தால், இதெல்லாம் கால்குலேட் பண்ணுவேன். `இதை பேசினா திமுக தலைமை என்ன நினைக்கும்? கூட்டணி கட்சியில் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க.? இது ஒரு நெருடலை உருவாக்குமே, நமக்கு கூட்டணி நாளைக்கு ஒரு சிக்கல் வந்துவிடும்’ என்று நான் கவலைப்பட்டு இருக்கணும். நான் அதை பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் தேர்தல்ல ஒரு பொருட்டா கருதவில்லை என்று தான் அர்த்தம்.
இதை நான் எதற்கு பேசுகிறேன் என்றால், மது ஒழிக்கப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்னை. இதனால் தேசத்துக்கே மனித வளம் பாழாகிறது என்று சொல்கிறேன். மனித வளம் பாழாகுகிறது என்று நான் இத்தனை முறை மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேனே, யாராவது ஒரே ஒரு தலைவர் தேசிய அளவில் மனித வளம் பாழாகிறதுன்னு திருமாவளவன் சொல்கிறாரே, எந்த அடிப்படையில சொல்றாரு? இது எப்படி தேசிய அளவில் மனிதவளம் பாழாகிறது? மனித வளத்துக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யாராவது விவாதம் நடத்தி இருக்காங்களா? யாராவது கேள்வி எழுப்பி இருக்காங்களா? அதுக்கு யாராவது விடை சொல்லி இருக்கிறார்களா.?”
“நீங்க மாநாட்டுல பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜகவும் வேண்டாம் என்று சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வர தானே செய்யும்?”
“அவங்க ரெண்டு பேருக்கும் கோபம் வரட்டும். இது நான் ஏற்கனவே எடுத்த முடிவு இது. சித்தாந்த அடிப்படையிலும் சரி மற்ற செயல்முறை அடிப்படையிலும் சரி, பாரதிய ஜனதாவோடு எங்களால சேர்ந்து செயல்பட முடியாதுன்னு நாங்க முடிவு எடுத்துட்டோம். மற்ற அரசியல்வாதி போல் இருந்திருந்தால், ஆதாய கணக்கு போடக்கூடியவனா இருந்தால், பாரதிய ஜனதா கதவை நான் ஏன் மூடணும்? பாரதிய ஜனதா கதவை நான் திறந்து வைத்திருந்தால்தானே எனக்கு நல்லது. பாமக கதவை நான் ஏன் மூடணும். பாமக-வும் நாளைக்கு எனக்கு பயன்படும். நாளைக்கு ஒரு நாள் அவர்களோடு சேர்ந்து நம்ம அரசியல் பண்ண வேண்டி இருக்கும். நாம ரெண்டு பேரும் சேர்ந்தாக்க அல்லது அவர்களோடு சேருவோம்ங்கிற பயத்தை எதிர்ல இருக்கிறவங்களுக்கு உண்டு பண்ணா கூட நமக்கு ஒரு ஒரு பேரம் பேசுவதற்கான வலிமை கூடும். இப்ப நானே வந்து கதவை சாத்துகிறேன் பாமகவோட நான் போகமாட்டேன். பாரதிய ஜனதாவோட போகமாட்டேன்.
என்னுடைய தேர்தல் அரசியலுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்னுடைய சீட்டு பேரத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கல. நான் எந்த காரணத்திற்காக எந்த நோக்கத்துக்காக எந்த பிரச்னைக்காக போராடுகிறேனோ அந்த பிரச்னைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இப்ப அதனால் தான் நானே சொல்றேன் சாதிய மதவாத சக்திகளோடு சேர முடியாது. தமிழ்நாட்டு அரசியல் உள்ள பாமகவும் ஒரு முக்கியமான சக்தி. பாமக-வோட சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு தேவை எழலாம். ஆனால் நான் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். பிறகு மது ஒழிப்பு பிரச்னையில் சேரலாம் என்றால் எப்படி போய் சேர முடியும். முதலிலேயே அவர்களுடன் நான் சேருவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அப்புறம் எப்படி அவங்களோட இதுல மட்டும் கை கோர்க்க முடியும்? அவங்க போராடலன்னு நான் சொல்லலையே, அவங்களுக்கும் மது ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நான் கேட்டிருக்கிறேனா? பாமக ஒரு நாளும் அதை பத்தி பேசினது இல்ல அப்படின்னு ஏதாவது விமர்சனம் செய்து இருக்கிறேனா? நான் எதுவும் அவர்களுடைய மது ஒழிப்பு தொடர்பான எந்த பிரச்னையும் நான் தலையிடவில்லை. அவங்க தனியா குரல் கொடுக்கட்டும் அல்லது இந்த மாதிரி சேர்ந்து கூட குரல் கொடுக்கட்டும் இதே நேரத்துல அவங்க ஒரு மாநாடு நடக்கட்டுமே, திமுக அரசுக்கு ஒரு பிரஷர் கொடுக்கட்டுமே. அவர்களுக்கு என்று ஒரு நோக்கம் இருக்கும். அதை கையில எடுங்க. 69 பேர் இறந்து இருக்கிறார்கள் தானே. போராட்டம் நடந்துங்கள், இதேபோல் ஒரு மாநாட்டை நடத்துங்கள் ஏன் நடத்தவில்லை?.”
“விசிக-வினர் `கூட்டணி பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை’ என்கிற கருத்துக்களை சொல்லும் போது சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறதே?”
“இந்த மாதிரி பிரச்னைகள் வரும் என்று தெரியாம நாங்க அதை செய்யவில்லை. அப்படி பிரச்னை வந்தாலும் பரவாயில்லை, அதை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் மது ஒழிப்பு பிரச்னை முக்கியம். எனக்கு கூட்டணியில நெருடல் உருவாகிவிடும். உடைஞ்சு போயிடும் அப்படின்னு நான் பயந்துகிட்டு பின்வாங்கிட்டால், 69 பேர் செத்தாலும் பரவாயில்லைன்னு நான் போயிடுற மாதிரி ஆகிடும். அப்ப கள்ளச்சாராயம் பெருகட்டும் மது கடைகள் திறந்து இருக்கட்டும். இளைஞர்கள் குடித்து மதுவுக்கு அடிமையாகட்டும். `எக்கேடு கெட்டு போகட்டும் ’அப்படின்னு நாம இருக்க முடியுமா? என்னுடைய கூட்டணி நலனுக்காக நாலு அஞ்சு தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வதற்காக நான் இந்த பிரச்னையை கைவிட்டுட முடியுமா. ஒருவேளை இந்த பிரச்னையை கையில் எடுப்பதனால், ஒரு நெருடல் உருவாகி அதனால் ஒரு விரிசல் ஏற்பட்டால் கூட அதனை நேர்கொண்டு தான் ஆகவேண்டும்.”
“திமுகவினர் சிறந்த முறையில் இதனை கையாண்டர்களா? உங்கள் பார்வையை சொல்லுங்கள்…”
“கட்டாயமா, ஏன்னா அவங்களுக்கு இந்த கொள்கையில உடன்பாடு இருப்பதனால்தான் அவங்க இந்த முடிவை எடுத்திருக்காங்க. இதை வெறும் தேர்தல் கணக்காக அவங்க பார்க்கவில்லை. ஏன்னா இன்றைக்கு விமர்சனம் பண்றவங்க எல்லாம் ஏதோ ஸ்டாலின் வந்த பிறகுதான் இந்த கடையை மீண்டும் திறந்துவிட்டார். அவரால்தான் இவ்வளவு தூரம் நடந்து போச்சுங்கிற மாதிரி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாங்க. இல்லனா நேராக அவருடைய அப்பாதான் திறந்தாரு அதோட நிறுத்திக்கிறாங்க. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுல, ஒரு வாதத்துக்காக நான் சொல்றேன்… இது எனக்கு அதிமுக மேல குற்றம் சொல்லணும் அல்லது எம்ஜிஆர் மேல குற்றம் சொல்றது என்று அர்த்தம் கிடையாது. 1971ல கலைஞர் கருணாநிதி கடையை திறக்கிறார். அப்போது அவர் என்ன விளக்கம் சொல்றாருன்னா `மது விலக்கை நடைமுறைப்படுத்த முன்வரக்கூடிய மாநிலங்களுக்கு மத்திய அரசு,நிதி உதவி தரணும் அப்படின்னு கேட்கிறார். அப்ப இருந்த காங்கிரஸ் அரசு தரவில்லை.
`நிர்வாகம் என்னால நடத்த முடியல போதிய வருவாய் இல்லை. வேற வழி இல்லை சுற்றிலும் கடைகள் திறந்து வியாபாரம் ஓடிக்கிட்டு இருக்கு. நான் நெருப்பு வளையத்திற்கு நடுவில் சிக்கிய கற்பூரத்தைப் போன்ற நிலையில் உள்ளேன். அப்படி தான் தமிழ்நாடு இருக்கிறது’ அப்படின்னு ஒரு விளக்கம் அவர் சொல்கிறார். எல்லாம் இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும்? வேறவழி இல்லை அப்படின்னு அவரு தன்னுடைய நிலையை விளக்குறார். கடையை திறக்கிறார். என்றாலும் அது குற்றம் தான்.
ஆனால் 1974-ல் மூடினார் அல்லவா மூடினார்னு யாராவது சொல்றாங்களா? 1971 இல் திறந்தவர் 1974 இல் மூடினார். கலைஞர் மது கடைகளை மூடிவிட்டார். அதனால ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து விட்டார். ஏதோ ஒரு வகையில அவர் மூடுவதற்கான ஒரு முடிவை எடுத்தார் அப்படின்னு இதுவரை யாராவது பேசி இருக்காங்களா. விமர்சனம் பண்றவங்க கருணாநிதி திறந்துவிட்டார், கருணாநிதி திறந்துவிட்டார்னு மூச்சுக்கு 300 முறை திரும்பத் திரும்ப பேசக்கூடியவர்கள், 1974 லே கலைஞர் கருணாநிதி அந்த திறந்த மதுக்கடைகளை மூடினார். மூடும்போது தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை என்று அண்ணா சொன்ன கருத்து மறுபடியும் சொன்னாருங்கிறத யாரும் ஏன் பேசுறது இல்ல.
1981இல் மதுக்கடைகளை திறந்தது யார் கலைஞரா திறந்தார். எம்ஜிஆர் திறந்தார் என்று ஏன் சொல்வதில்லை. எம்ஜிஆர் காலத்திலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போ இதுவரைக்கும் விமர்சனம் செய்கிறவர்கள் யாரும் எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ ஏதாவது ஒரு இடத்தில் கூட சொல்வதில்லை, டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். அதனை மார்க்கெட்டிங் ப்ரொமோட் செய்தார்கள். வருமானம் அதிகப்படுத்துவதற்காக வழிவகை செய்தார்கள். இதற்கென ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்தார்கள் என்பன போன்ற விஷயத்தை யாராவது பேசுகிறார்களா?”.
“ராஜாஜி படத்தை மாநாட்டில் பயன்படுத்தியதற்கான காரணம் என்ன? அது குறித்து விமர்சனம் வருவது குறித்து உங்கள் கருத்து?”
“அந்த விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஏனென்றால் நான் சுய விமர்சனம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். ராஜாஜி அவர்களை நான் கட்-அவுட் இல் வச்சிட்டேன் என்பதை ஒரு பெரிய குற்றச்சாட்டா முன்வைக்கிறதா சில விவாதங்களை நாம் பார்க்கிறோம். பேட்டிகள் பார்க்கிறோம் குற்றச்சாட்டா முன்வைக்கிறாங்க. நான் கேட்கிறேன் குலத்தொழில் கொண்டு வந்த ராஜாஜியை கடுமையாக விமர்சிக்கிற நான் அவர் செஞ்ச ஒரு நல்ல காரியத்தை பாராட்டக் கூடாதா? குலத்தொழில் தப்புன்னு என்னால அவரை விமர்சிக்க முடியுது. நான் விமர்சிக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தையும் அவர் செஞ்சிருக்கிறாரே அதுக்கு என்ன காரணம் வேணாலும் இருக்கட்டும் என்ன பின்னணி வேணாலும் இருக்கட்டும். 1937 லேயே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாகாணத்தில் சட்டம் கொண்டு வந்தவர் ராஜாஜி என்பது வரலாறா இல்லையா?
நான் இல்லாததை சொல்றேனா ஏதாவது இட்டுக்கட்டி சொல்றேனா? அவர் செய்தார் தானே… உண்மை அதுதானே. வரலாறு நாம் சொல்லலனாலும் யாராவது சொல்லத்தானே போறாங்க. நீ படிக்கலனாலும் யாராவது படிக்கத்தானே போறாங்க… நீ எழுதலனாலும் வேற யாராவது எழுத தானே போறாங்க. குலத்தொழிலை விமர்சிக்கக்கூடிய திருமாவளவன் ஏன் மதுவிலக்குச் சட்டத்தை வரவேற்று பாராட்டக்கூடாது?. அது என்னுடைய நேச்சர். இடஒதுக்கீடு போராட்ட நேரத்துல தலித்துகளின் குடிசைகளை வந்து பாமகவினர் கொளுத்தினார்கள். ஆயிரக்கணக்கான குடிசைகள் கொளுத்தப்பட்டன. அவங்க போராட்டம் அரசுக்கு எதிராக ஆனால் அவங்க கொளுத்துனதெல்லாம் தலித்துகள் குடிசை. அப்பாவி மக்களுடைய குடிசைகளை கொளுத்துனாங்க. ஆயிரக்கணக்கான மக்கள் அதுல பாதிக்கப்பட்டாங்க. அவ்வளவு வழிகள் இருந்தும் ராமதாஸ் செய்த நல்ல காரியத்தை நான் பாராட்டி இருக்கேன். குடிதாங்கிக்கு போனாருன்னு சொல்லி அவரை பாராட்டின முதல் தலித் இயக்கத் தலைவர் திருமாவளவன் தானே…
தமிழ் குடிதாங்கி பட்டத்தை கொடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்து மதுரையில் மேலூர்ல ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் அவரை அங்கீகரித்து பாராட்டி பேசியது திருமாவளவன் தானே… அதுக்கு முன்னால் நடந்த வன்முறைகள் எனக்கு தெரியாதா? அந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் வட மாவட்டங்கள்ல வந்து தலித்துகளின் குடிசைகள் கொளுத்தப்பட்டது எனக்கு தெரியாதா? அதுல பாதிக்கப்பட்டது தெரியாதா? அதுல மக்கள் கண்ணீர் வடித்தது தெரியாதா? அதெல்லாம் இருந்தாலும் கூட அதை விமர்சிக்கக் கூடிய நிலையில் இருந்த நாங்கள் இதையும் பாராட்டுகிறோம். அவருக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்திருக்கிறோம். அவரோட நாங்க கைகோர்த்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்துல நடை போட்டு இருக்கிறோம். ஈழத் தமிழர் விஷயத்துல அவருடைய பங்களிப்பை நாங்க பாராட்டி இருக்கிறோம். அதையும் நான் விமர்சிக்கிற போது இதையும் நான் பாராட்டுகிறேன். குலத்தொழிலை விமர்சிக்கிற போது டோட்டல் ப்ரோஹிபிஷன் ஆக்ட்-ஐ ராஜாஜி கொண்டு வந்ததையும் நான் பாராட்டுறேன் அவ்வளவுதான். அதனால நான் அவரை கொள்கை தலைவரா ஏத்துக்க முடியுமா? எங்களுடைய கொள்கை ஆசான்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் அவ்வளவுதான். அதை நாங்க டிக்ளர் பண்ணிட்டோம். புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் அவருடைய இடதுசாரி அரசியல் தான் எங்களுடைய கோட்பாடுகள். நான் எந்த வகையிலும் இனிமே அடுத்து வரக்கூடிய நிகழ்வுகளை போய் நாங்க காந்தி படத்தை வைக்க போறதில்லை ராஜாஜி படத்தை வைக்க போறதில்லை.”
“தொடர்ந்து எப்படி ராஜாஜியை பாராட்டுவீங்க?”
“ராஜாஜியுடைய அந்த செயலை பாராட்டாம இருக்க முடியாதே. டோட்டல் ப்ரோபிஷன் ஆக்ட் கொண்டு வந்தவரை எப்படி நீங்க வந்து இருட்டடிப்பு பண்ண முடியும். அது எப்படி சொல்லாம இருக்க முடியும்? மதுவிலக்கு கொள்கைக்கு அவர்தான் சட்டம் கொண்டு வந்தார். அவருக்கு முன்னால வேற யாராவது கொண்டு வந்தாங்கன்னா சொல்லுங்க… `அவரு கொண்டு வரல அவர் காலத்துல வேற யாரோ அதுக்கு முன் முயற்சி எடுத்தாங்க அப்படின்னு சொல்லுங்க’ அவர் பற்றி பேசுவோம்.