Samsung Employees: “தேடி தேடி சிறைப்படுத்தி… திமுக அரசின் கொடுங்கோன்மை..!” – காட்டமான சீமான்

ஸ்ரீபெரும்புதூரின் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலையின் ஊழியர்கள் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருப்பதும் போராட்ட பந்தலை அகற்றியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடும் தி.மு.க அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா?

ஸ்டாலின், உதயநிதி

சமத்துவம், சம உரிமை, சமூகநீதி ஆகியவற்றின் காவலர்கள் தாங்கள்தான் என தற்பெருமை பேசும் திமுக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, ‘சாம்சங்’ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88