நெல்லை: அதிமுக பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்; திடீர் பல்டிகளால் நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 18 உறுப்பினர்களைக் கொண்டது. அ.தி.மு.க-வுக்கு 9 உறுப்பினர்களும், தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு தலா இரு உறுப்பினர்களும், பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க-வுக்கு தலா ஒரு உறுப்பினரும் நான்கு சுயேச்சைகளும் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் 16 தி.மு.க வசமான நிலையில், பலத்தை எதிர்ப்பையும் மீறி இந்த ஒரு பேரூராட்சியை மட்டுமே அ.தி.மு.க கைப்பற்றியது.

திசையன்விளை பேரூராட்சி அலுவலகம்

சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரத்துக்கு உட்பட்ட திசையன்விளை பேரூராட்சியின் தலைவராக அ.தி.மு.க மகளிரணியைச் சேர்ந்த ஜான்சிராணி பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க சார்பாக நெல்லை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். அவரைப் பொறுப்பிலிருந்து நீக்க தி.மு.க., சார்பாகத் தீவிர முயற்சி நடந்தது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 13-ம் தேதி தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரு கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு பேரூராட்சிகளின் உதவி இயக்குநரிடம் கொடுக்கப்பட்டது. அதனால் இன்று (10-ம் தேதி) வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எப்படியாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிபெற வைத்து இந்த பேரூராட்சியையும் கைப்பற்ற தி.மு.க-வினர் தீவிரம் காட்டினர்.

ஆட்சியரை சந்திக்க வந்த அ.தி.மு.க-வினர்

ஆனால், அதி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் இந்த பேரூராட்சியை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என முனைப்புடன் செயல்பட்டனர். இந்த நிலையில், தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களான பிரேம்குமார், சண்முகவேல் ஆகிய இருவரும் மீண்டும் அ.தி.மு.க-வுக்கே திரும்பியதால் பரபரப்பு நிலவியது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது என்று வாக்கெடுப்பு நடத்த எற்பாடுகள் நடந்த நிலையில், ஒரு கவுன்சிலரை தவிர யாருமே கூட்ட அரங்கத்துக்குச் செல்லவில்லை. அதனால் வாக்கெடுப்பு நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாகக் கருத வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என அறிவிக்க கோரும் ஜான்சிராணி

ஆனால், தி.மு.க-வினரோ, “இந்த வாக்கெடுப்பு பேரூராட்சிகளின் துணை இயக்குநர் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும். அவர் வராததால் வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.” என மனு அளித்தனர். வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்தினால் தங்கள் கவுன்சிலர்களுக்கு ஆசையைக் காட்டி தீர்மானத்தை வெற்றி பெற வைத்து விடுவார்களோ என்ற அச்சம் அ.தி.மு.க-வினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

பேரூராட்சித் தலைவர் ஜான்சிராணி தலைமையில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போதுமான உறுப்பினர்கள் பங்கேற்காததால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் தீமானம் தோல்வியடைந்ததாகவே கருதப்படும். அதை முறைப்படி பேரூராட்சி நிர்வாக அலுவலர் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆட்சியரைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள்.

ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள்

அ.தி.மு.க உறுப்பினர்களில் இருவர் தங்களின் பக்கம் இருக்கும் நம்பிக்கையிலேயே தி.மு.க-வினர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகள் சரியான வகையில் காய் நகர்த்தியதோடு, பா.ஜ.க., கவுன்சிலரின் ஆதரவையும் பெற்று விட்டனர். எனவே தங்களால் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ஒத்திவைக்க தி.மு.க-வினர் கோரிக்கை விடுத்தனர். அது ஏற்கப்பட்டால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற கவலை அதி.மு.க-வினருக்கு ஏற்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs