ஹரியானா தேர்தல்: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன?

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – பா.ஜ.க., இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை விட அதிகமாக இரண்டு இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பா.ஜ.க.,. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கும் ஜிலேபி பார்சல் அனுப்பியிருக்கிறது ஹரியானா மாநில பா.ஜ.க.,. அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருக்கிறது.

ஹரியானா பாஜக

முன்னதாக ஹரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, “ஜிலேபி நாடு முழுவதும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உருவாக்குவதற்காக ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஆனால், ஜிலேபி விற்பனையாளர்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, சரக்கு மற்றும் சேவை வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பா.ஜ.க-வினருக்கு ஜிலேபி சாப்பிட மட்டும்தான் தெரியும். அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாது.” எனப் பேசினார்.

இதை அப்போதே பா.ஜ.க., தலைவர்கள் கேலி செய்தனர். முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “எனக்கும் கோஹானா ஜிலேபி பிடிக்கும்… ஆனால் அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை விரைவில் புரிந்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த விவகாரம் காரணமாகவே, ஹரியானாவில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸுக்குப் பா.ஜ.க., ஜிலேபி அனுப்பியிருக்கிறது.