Samsung Employees Strike: “தொழிலாளர்களை அடக்குமுறையால் ஒடுக்குவதா..?” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெருபுதூரில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 25 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை சாம்சங் ஊழியர்களின் போராட்டக்குழு முழுமையாக மறுத்தது. அதைத் தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்படுவதாகவும், போராட்டக் குடில் அகற்றப்பட்டதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின.

சாம்சங் தொழிலாளர்கள்

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர் – நிறுவனம் – அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, “நானும் தொழிலாளி” என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…