திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரீத்தி. இவர்களது மகன்கள் ஜெயபிரியன், ஜீவபிரியன் மற்றும் தியாகராஜனின் பெற்றோரான நாட்ராயன், மனோன்மணி ஆகியோருடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனது மாமா வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு புதன்கிழமை அதிகாலை உடுமலை வழியாக பழனி சென்றுள்ளார்.
தியாகராஜன் ஓட்டி வந்த ஜீப் கருப்புசாமிபுதூர் அருகே வந்தபோது எதிரே பழனி சென்றுவிட்டு பாலக்காடு நோக்கிச் சென்ற வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த தியாகராஜன் (45) அவரது மனைவி ப்ரீத்தி (45), மகன் ஜெயபிரியன், தாய் மனோன்மணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வேனில் வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 23 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில், பலத்த காயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றொரு மகன் ஜீவப்பிரியன் (13) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய புறவழிச் சாலை பணிகள் நடைபெறுவதால் ஒரே பாதையில் எதிரெதிரே இரு வாகனங்களும் சென்றதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.