வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டியவை மற்றும் உரிமையாளரிடம் நல்லுறவு மேற்கொள்வது போன்றவற்றைப் பற்றி, Best Service Realty உரிமையாளர் எஸ். சிவகுமார், சில ஆலோசனைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு வீட்டிற்கு வாடகைக்குச் செல்கிறோம் என்றால், முதலில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கேட்டு எந்த ஏரியாவில் வாடகைக்குப் போகலாம், குழந்தைகளுக்கு பள்ளி, நாம் அலுவலகங்களுக்குச் சென்றுவருவது, சூப்பர் மார்க்கெட் மற்றும் கோயில்கள் அருகாமையில் இருக்கின்றனவா என்றும்… அங்கு எத்தனை ஆண்டுகள் வசிக்கப் போகிறோம் என்பதையெல்லாம் யோசித்து இதற்கெல்லாம் அதற்கு ஏற்றார்போல் தேர்ந்தெடுப்பது நல்லது. இப்படி முன்பே கவனித்துச் செல்வதால் வருடா வருடம் வீடு மாற்ற வேண்டிய தேவை குறைகிறது.
வீட்டிற்கான முன்பணம் பற்றிய விவரங்களை உரிமையாளரிடம் முன்பே பேசித்தீர்த்துக் கொள்வது சரியானது. பெரும்பாலும் வீடு மாற்றுவதற்குக் காரணம், அந்த வீட்டின் உரிமையாளர் வாடகையை அதிகரிப்பதே. உங்களுக்கும், உரிமையாளருக்கும் தனிப்பட்ட புரிதல் இருக்கும்பட்சத்தில் வாடகை அதிகமாவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக Rental Agreement களில் வருடத்திற்கு, அல்லது இத்தனை வருடத்திற்கு இவ்வளவு வாடகையை அதிகரிக்கலாம் என நீங்களும், உரிமையாளரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் வாடகை அதிகரிப்பு பிரச்னை தீர்ந்துவிடும்.
உங்களின் செல்லப்பிராணிகளுக்கு அங்கிருக்கும் அசோசியேஷன் அனுமதி வழங்குகிறதா என்பதைக் கவனித்து வாடகைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கமுடியும். அதேபோல் சிலர், வாடகை வீடு தானே என்று சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பார்கள், அந்த மாதிரியெல்லாம் இருக்காமல், சொந்த வீட்டைப் பராமரிப்பு செய்வதுபோல பராமரிக்கவேண்டும். அசோசியேஷன் உடன் இணைந்து சில பொறுப்புகளை எடுத்துச் செய்வதால் அண்டைவீட்டார்களிடம் நட்பு வளரும், உரிமையாளருக்கு இது மகிழ்ச்சி அளிப்பதால் வாடகை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
வாகனங்களுக்கான தனி பார்க்கிங் மற்றும் லிஃப்ட் வசதிகள் எல்லாம் இருக்கிறதா எனக் கவனித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புதுமண தம்பதிகள் லிஃப்ட் இல்லையென்றாலும் வாடகைக்குச் சென்றுவிடுவார்கள், ஒரு வருடம் கழித்து அப்பா, அம்மா மற்றும் மாமனார், மாமியார் வந்து அங்கு வசிக்கும்போது லிஃப்ட் இல்லையென்றால் அது மிகப்பெரிய குறையாக மாறும். இது நடைமுறையில் இருக்கக்கூடிய சிக்கல். வாழப்போகும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் மனதில் வைத்து வீட்டினை தேர்ந்தெடுங்கள். இன்றைய காலகட்டத்தில் நிறைய வாடகை வீடுகளில் பொதுவான ஜிம் மற்றும் ஸ்விம்மிங்பூல் போன்றவை இருக்கின்றன. இந்த மாதிரியான வீடுகளைத் தேர்ந்தெடுப்பதால் கூடுதல் மகிழ்ச்சி தருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
தேவையான இத்தனையையும் கவனித்து வாடகை வீட்டிற்குச் செல்வதால் நீங்களும் சந்தோஷமாக அனைவருடனும் இணக்கமாக வாழலாம். உரிமையாளரும் மகிழ்வுடன் இருப்பார்.