NTK: தொடரும் விலகல்கள்; நீக்கங்கள்… சீமானின் `சர்வ’ அதிகாரத்தால் திணறுகிறதா நாம் தமிழர் கட்சி?!

நாம் தமிழர் கட்சியில், மண்டல நிர்வாகிகள் விலகுவதும், முக்கியப் பொறுப்பாளர் நீக்கப்படுவதும், அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வதும் தற்போது தொடர்கதையாகி இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்வாதிகார அணுகுமுறையும் உட்கட்சி ஜனநாயகமின்மையும்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்கிறார்கள் விலகினவர்களும் விவரமறிந்தவர்களும். இதுகுறித்து நா.த.க-வினர் மத்தியில் விசாரித்தோம்.

“கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் ஐ.டி விங் செயலாளர் சுதன் ராஜு உள்ளிட்டோர் அண்மையில் நா.த.க-விலிருந்து விலகியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தலைமைக்கு நெருக்கமான சென்னை மாவட்ட நிர்வாகி புகழேந்தி மாறன் விலகினார். அதற்கு முன்பு சீமானுடன் பல ஆண்டுகள் நெருக்கமான இருந்த வெற்றிக்குமரன் நீக்கப்பட்டார், கொங்கு பகுதியில் முக்கிய முகமான மாநில நிர்வாகி ராஜா அம்மையப்பன் விலகினார் என விலகல் பட்டியல் நீள்கிறது. தொடர்ந்து மாநில நிர்வாகியான நத்தம் சிவசங்கரன் உள்ளிட்டவர்கள் ஒதுங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பொதுக் குழுவில் சீமான்

“கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தடா சந்திரசேகரின் மறைவையடுத்து, 2023 டிசம்பர் மாதம் நடந்த நா.த.க பொதுக் குழுவில் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் தேர்வான பொதுச் செயலாளர் யாரென்றே அன்றைய தினம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆறு மாதத்துக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாய்தவறி சீமானே `நம் பொதுச் செயலாளர் திருமால் செல்வன்’ என்ற பிறகே அறிந்துகொண்டோம். அவர் மருத்துவர் என்பதைதாண்டி `கட்சிக்கு அவர் யார், கட்சிக்கு அவர் என்ன செய்தார்’ என்பதை இன்றுவரை எங்களால் அறியமுடியவில்லை. இதுவே நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் லட்சணம்” என்ற குமுறலோடு பேசத் தொடங்கினர் மண்டல பொறுப்பாளர்கள் சிலர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அபிநயா

தொடர்ந்து, “10-15 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்கள் தேர்தலில் நிற்க தங்கள் விருப்பத்தை தெரிவிப்பது அவரவர் உரிமை, அப்படித்தான் திராவிடக் கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று மாவட்டப் புள்ளிகளின் ஆலோசனை பெற்றே வேட்பாளர்களை அறிவிக்கிறார்கள். ஆனால் `தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு தலைமை வழங்கும் முத்திரை `சுயநலவாதி” என்றவர்கள், `தேர்தலில் நான் சொல்பவர்தான் வேட்பாளர். விருப்பமிருந்தால் இரு.. இல்லையெனில் கட்சியைவிட்டு கிளம்பு’ என்ற சீமானின் வார்த்தைகள்தான் இது நம் கட்சியல்ல. சீமானின் கட்சி என்ற உணர்வையே தருகிறது.

வேட்பாளர்கள் தேர்வில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இதே பார்முலாவைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். தொகுதி களப்பணி செய்வோர் பட்டியலுக்கும் வேட்பாளர்கள் பட்டியலுக்கும் நீண்ட தூரம் இருக்கிறது” என்கின்றனர். தஞ்சை மண்டல நிர்வாகிகள் சிலரோ, “டெல்டா மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் சீமான். ஆனால் தேர்தல் நேரங்களில் பரப்புரைக்காக வருவோரையும் வேட்பாளராக அறிவித்து வருகிறார்” என்றனர் சோகத்துடன்

சீமான்

நம்மிடம் பேசிய கட்சியின் உள்விவகாரமறிந்தவர்கள், “15 ஆண்டுகளுக்கான கட்டமைப்பு நா.த.க-விடம் இல்லை என்பதை சீமானே ஒப்புக்கொள்வார். மாநில, மண்டல மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை நியமிப்பதில் தலைமை காட்டிய ஆர்வத்தை கிளை கட்டமைப்பிலும் பூத் கமிட்டி அமைப்பதிலும் துளியளவும் காட்டாவில்லை. அதனை சீர்படுத்த வேண்டிய மாவட்டச் செயலாளர்கள் பல்பிடுங்கப்பட்ட பாம்பாகவே இருப்பதாக தெரிகிறது. மண்டல பொறுப்பாளர்களையோ தலைமைக்கு நெருக்கமானவர்களையோ சமாளிக்க முடியாத நிலையில்தான் பல மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். மாவட்ட பிரச்னையை தீர்க்க வேண்டிய கலந்தாய்வு கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் சீமான் தன்நம்பிக்கை பேச்சாளராக இருக்கிறாரே தவிர பிரச்னையை தீர்க்கும் கட்சித் தலைவராக இல்லை.

கலந்தாய்வுகளில் தலைமை நிர்வாகிகள் பேசுகிறார்களே தவிர மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை சொல்ல எந்த வாய்ப்பும் வழங்குவதில்லை. மாவட்டச் செயலாளர்களுக்குத்தான் இப்பிரச்னை என்றால் மாநில நிர்வாகிகள் வளர்ந்துவிடாமல் முட்டுக்கட்டை போடவும் போதுமான ஆட்கள் கட்சிக்குள் நிறைந்தே இருக்கிறார்கள். அவர்களை சீமான் களையாவிட்டால் `இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வளருவதில் சீமான் தடுக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு நாளடைவில் உறுதியாகும்” என்றனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் சீமான்

மனம்வருந்தி பேசிய வட மாவட்ட நிர்வாகிகள் சிலர், “கட்சியில் பொறுப்பாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. பொதுக்கூட்டத்துக்காகவும் கலந்தாய்வுக்காகவும் அவர் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் மேடை முதல் பதாகைகள் வரை அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளுக்கெல்லாம் எங்கள் கையிலிருந்துதான் செலவு செய்கிறோம்.ஆனால் அவரோ வருவார், பேசுவார், சென்றுவிடுவார். அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் யார் என்பது கூட அவருக்குத் தெரியாது.

சீமான்

அந்தந்த மாவட்டங்களுக்கு வரும்போது எங்களை பெயரைக்கூட மேடைகளில் சீமான் குறிப்பிடுவதில்லை. இப்படி வேட்பாளர்கள் தேர்வில் நடைமுறை சரியில்லை, உள்கட்சி பிரச்னைகள் தீர்க்க வழியில்லை, மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கு எந்த மரியாதையும் இல்லை, தனிப்பட்ட பொருளாதாரத்தை கட்சிக்கு இறைத்தும் பயனில்லை” போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் தான் நிர்வாகிகள் வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.

நிர்வாகிகள் வெளியேறுவதும், அவர்கள் தலைமைமீது குற்றச்சாட்டு வைப்பதையும் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கொண்ட சீமான் `இது மக்கள் பிரச்னையல்ல’ என ஒருவார்த்தையில் முடித்தார். ஆனால் அது கட்சிக்கு பெரும் பிரச்னையாக இருக்குமென்பதை அவர் இன்னும் உணரவில்லை” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY