ஈரோடு: குடிபோதையில் லஞ்சம் கேட்டதாகப் புகார்; பரவிய வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட காவலர்!

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் கடந்த 2-ஆம் தேதி இரவு, செல்வக்குமார் பணியில் இருந்துள்ளார்.

அப்போது, வாழைக்காய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் குடிபோதையில் இருந்த செல்வக்குமார் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் செல்வக்குமார் இடையே நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து, பவானி துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நடத்திய விசாரணையின் அடிப்படையில், காவலர் செல்வக்குமாரை ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

உயிரிழப்பு

இந்நிலையில், மனமுடைந்து காணப்பட்ட செல்வக்குமார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள், செல்வக்குமாருடன் வாக்குவாதம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.