Air Show: “கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை” – ப.சிதம்பரம்

சிவகங்கை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் முன்னிலையில் கலெக்டர் ஆஷா அஜீத்திடம் வழங்கினார்கள்.

  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்  பேசும்போது, “சென்னை மெரினாவில்15 லட்சம் பேர் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். கூட்டத்தில் நெரிசலில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் மயக்கமடைந்து சிலர் உயிரிழந்துள்ளது வருந்தத்தக்கது. 15 லட்சம் பேர் கண்டுகளித்த விமானப்படையினரின் சாகசம் பாராட்டுக்குரியது. ஆனால், உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நெரிசல்

நாளை தேர்தல் முடிவுகள் தெரிய வரும். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரசுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். கருத்துக்கணிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆனால், எங்களுக்கு கட்சி ரீதியாக கிடைத்த செய்திகளும், அரசியல் வல்லுனர்கள், அங்குள்ள பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

ப.சிதம்பரம்

இஸ்ரேல் – ஈரான் போர் நிற்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்து. ஓராண்டு போர் நீடிப்பது நல்லதல்ல, போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரதமர் பேசியுள்ளார். அதனை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்கிறோம். போர் நடைபெற்று வருவதால் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடுமையான விலை உயர்வு இருக்கும் எனக் கூற முடியாது, கணிசமாக எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்டுக்கோப்பாக உள்ளது. திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெறும். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சியில் பங்கு வேண்டும் என சிலர் பேசுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் ஆர்டிகல் 370 பிரிவை நீக்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கவில்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு” என தெரிவித்தார்.