ஈரான் மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல்; மத்திய கிழக்கில் பிராந்திய போர் மூளும் சூழல் – என்ன நடக்கிறது?

மணிவண்ணன் திருமலை, கட்டுரையாளர், பிபிசி உலக சேவை தமிழின் முன்னாள் ஆசிரியர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலில் ஊடுருவி, ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக , இஸ்ரேல் காஸாவில் தொடங்கிய போர், அங்கு ஏற்படுத்திய பேரழிவைத் தாண்டி, இப்போது லெபனானுக்கும் பரவி,  மத்திய கிழக்கில் ஒரு பிராந்தியப் போராக மூளுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. 

ஒரு வருடமாக தனது ஒட்டு மொத்த ராணுவ பலத்தையும் பிரயோகித்தும்,  காஸாவில், ஹமாஸ் இயக்கத்தை வேரறுப்பது என்ற இஸ்ரேலின் நோக்கம் இன்னும் முழுமையாக எட்டப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. 

இஸ்ரேலின் இரண்டாவது முக்கிய இலக்கான,  ஹமாஸ் கடத்தி வைத்திருக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் சில ராணுவத்தினரை விடுவிப்பது என்பதும் இன்னும் வெற்றி பெறாத நிலையில், அதன் பார்வை இப்போது வடக்கே லெபனானில் இருந்து,  கடந்த ஓராண்டாக ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இஸ்ரேலின் மீது ராக்கெட் தாக்குதல் தொடுத்துவரும் ,  ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீதும் திரும்பியிருக்கிறது 

இந்த இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் “போஷகராக” செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் ஈரானும் இஸ்ரேல் மீது கடந்த வாரம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள்,  இப்பிரச்சனையை சர்வதேச சமூகத்திற்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கின்றன.

ஹமாஸ் கடந்த ஆண்டு இஸ்ரேலிய எல்லைப்புற கிராமங்களில் புகுந்து நடத்திய அதிரடித் தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஹமாஸ் சுமார் 250 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுவிட்டது இஸ்ரேலின் வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்திராத ஒரு சம்பவமாகப் பார்க்கப்பட்டது.

காஸாவுக்குள் இஸ்ரேலியப் படைகள் கடந்த ஓராண்டாக நடத்திவரும் பதில் தாக்குதல்கள், ஹமாஸின் ராணுவ பலத்தை பெருமளவு குலைத்திருப்பதாக பல மத்தியக் கிழக்கு பார்வையாளர்கள் கூறினாலும், ஹமாஸ் இன்னும் ஒட்டு மொத்தமாக களத்தில் இருந்து அழிக்கப்பட்டதாக தெரியவில்லை.

காஸா நகரம்

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே , ஜூலையில், ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்ள வந்திருந்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும்,  ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார் இன்னும் உயிருடன் இருக்கிறார்.  

இந்த நிலையில் இஸ்ரேல் தனது பார்வையை வடக்கே லெபனானின் மீதும், கிழக்கே இரானின் மீதும் திருப்ப காரணத்தைப் புரிந்து கொள்ள லெபனானின் அரசியல் மற்றும் இப்பிராந்திய முஸ்லிம் நாடுகளிடையே நிலவும் சன்னி-ஷியா அரசியலையும் கவனிக்க வேண்டும் .

ஹிஸ்புல்லாவின் பின்னணி என்ன ?

ஹிஸ்புல்லா லெபனானின் தென்பகுதியில் உள்ள ஷியா மக்களிடையே செல்வாக்கு பெற்ற ஒரு அரசியல்-ராணுவ அமைப்பு.  

1975 – 1990 காலகட்டத்தில் லெபனானின் முக்கிய மூன்று சமூகங்களான, சன்னி, ஷியா மற்றும் மெரொனைட் கிறித்தவர்கள் ஆகியோருக்கிடையே நடந்த பெரும் உள் நாட்டு மோதல்களின் இறுதியில் உருவான இந்த அமைப்பு, ஒரு பெரிய அரசல்லாத ராணுவ அமைப்பாக ( ARMED , NON STATE ACTOR)  இயங்கிவருகிறது .  

இஸ்ரேலுக்கு தனி நாடாக இயங்க உரிமை இல்லை என்பதை தனது அமைப்பின்  நிறுவனப் பிரகடனமாகவே வைத்திருக்கும் இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு பொதுச்செயலாளராகவும்,   தலைவராகவும் இருந்தவர் ஹஸன் நசரல்லா.  64 வயதான இவர் ஹிஸ்புல்லாவை இப்பிராந்தியத்தின் ஒரே பெரும் ஷியா நாடான இரானின் உதவியுடன் ஒரு சக்திவாய்ந்த ராணுவ அமைப்பாக மற்றியிருக்கிறார்.

கடந்த  2006-ல் ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலியப் படையினர் இருவரைக் கடத்திச் சென்ற சம்பவம், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கி, சுமார் ஒரு மாத காலப் போரில் முடிந்தது.  இந்தப் போர் ஐநா மத்தியஸ்தத்துடன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும்,  ஹிஸ்புல்லா – இஸ்ரேல் இடையே முழுமையான அமைதி ஏற்படவில்லை. 

இஸ்ரேல் கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் மீது குறி வைத்து காஸா மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த போது,  ஹமாஸுக்கு “தோழமை” காட்டும் விதமாக, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லைப்பகுதியில் பீரங்கி மற்றும் குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது இஸ்ரேலுக்கு தீராத தலைவலியைக் கொடுத்தது.

ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்களால், வட இஸ்ரேலியப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் வரை உள் நாட்டிலேயே இடம் பெயர வேண்டியிருந்தது.  இது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் உள்நாட்டு நெருக்கடியைக் கொடுத்தது.  

அவர் ஏற்கனவே,  ஹமாஸால் கடத்தி வைக்கப்பட்டுள்ள , இன்னும் விடுவிக்கப்படாத,  சுமார் 100 இஸ்ரேலியர்களை விடுவிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்று இஸ்ரேலியப் பொதுமக்களில் ஒரு கணிசமான பகுதியினரிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைமைவாத லிக்குத் கட்சியின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு,  சில அதி தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தயவில்தான் அரசதிகாரத்தில் இருக்கிறார். அந்த அழுத்தம் வேறு அவரது கடும்போக்கிற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. 

எனவே இந்த காஸா போரின் கடந்த இருமாதங்களாகவே இஸ்ரேலின் கவனம் ஹிஸ்புல்லா மீதும் திரும்பியது.  சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்களையே அசரவைத்த அந்த பேஜர்கள் வெடிப்பு நிகழ்வு இந்த பின்னணியில்தான் நடந்தது. 

ஹிஸ்புல்லா போன்ற போராளி அமைப்புகளின் தலைமைகள் தங்கள் போராளிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க பயன்படுத்து பேஜர்கள் ( Pagers)  1990களின் இறுதியில் மொபைல் தொலைபேசிகள் வருவதற்கு சற்று முன்னால் புழக்கத்துக்கு வந்த கருவி. 

Lebanon Video

அதன் புதிய , நவீனப்படுத்தப்பட்ட மாடல்களை ஒரு தைவான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொல்லா வாங்கியிருந்தது. அந்த நிறுவனத்திற்கு இந்தக் கருவிகளின் உதிரிப்பாகங்களை வழங்கும் பல நிறுவனங்களில் ஊடுருவியிருந்த மொசாத் அமைப்பு , அந்தக் கருவிகளில் வெடிபொருட்களை நிரப்பியதுடன், அவைகளை ரிமோட் கண்ட் ரோல் மூலம் இயக்கி வெடிக்க வைக்கும் வசதியையும் பெற்றிருந்தது. 

இந்த பேஜர் வெடிப்பு சம்பவங்களில் சுமார் 3,000 ஹெஸ்பொல்லா போராளிகள் காயமடைந்தனர், பலரும் செயல்பட முடியாதபடி உடல் உறுப்புக்களை இழந்தனர், சிலர் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. 

இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே,  பெய்ருட்டில் பதுங்கும் இடம் ஒன்றில் நடந்த சந்திப்புக்கு வந்திருந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நசரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். 

ஹசன் நசரல்லாவின் படுகொலை இஸ்ரேலுக்கு கிடைத்த மற்றொரு முக்கியமான ராணுவ வெற்றிதான் ,  இது ஹிஸ்புல்லா அமைப்பை தற்காலிகமாக பலவீனமாக்கும் என்றாலும்,  ஹிஸ்புல்லாவின் கதை இத்தோடு முடிந்துவிட்டது என்று சொல்லமுடியாது.  

ஹசன் நசரல்லாவுக்குப் பின் யார் அந்த அமைப்புக்கு தலைமை தாங்குவார், அவர் எந்த அளவுக்கு நசரல்லா போலவே இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திச்செல்வார் என்பதைப் பொறுத்தே அந்த இயக்கத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

ஈரானிய சிக்கல் 

இதனிடையே , லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்,  நசரல்லா கொலை ஆகியவை ஹிஸ்புல்லாவின் ஆதரவு நாடான ஈரானுக்கு பெரும் பிரச்சனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

மத்தியக் கிழக்கு பிராந்தியத்தின் பெரிய ஷியா சக்தி,  ஈரான்.  

Israel vs Iran | ஈரான் இஸ்ரேல்

ஈரானின் ஆதரவுடன் வளர்ந்து இயங்கிவரும் இயக்கங்கள்தான்   ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ; இந்த இரு அமைப்புகளும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்து அமைப்புகள் என்றாலும்,  ஹமாஸ் இயக்கம் காஸா பகுதியில் பிரதிநிதித்துவப்படுத்துவது சன்னி முஸ்லீம்களைத்தான். அவர்களையும் ஈரான் ஆதரிப்பது அதன் பிராந்திய அரசியல் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் காரணங்களுக்காக என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மத்திய கிழக்கில்,  ஈரான் , ஈராக் தவிர்த்து பிற நாடுகள் எல்லாமே சன்னி ஆட்சியாளர்களால் ஆளப்படுபவை.  பஹ்ரைனின் மக்கள் தொகையில் பெரும்பகுதி ஷியா முஸ்லீம்கள் என்றாலும், அங்கு ஆட்சி செய்வது சன்னி முஸ்லிம் ராஜ குடும்பமே. 

இந்தப் பின்னணியில்,  சன்னி முஸ்லிம் நாடுகள் பாலத்தீனப் பிரச்னையில், இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலத்தீன விடுதலைக்கு ஆதரவாகவும் உறுதியான நிலைப்பாடு எடுக்காததற்கு அமெரிக்காவின் செல்வாக்கே காரணம் என்று கூறப்படுகிறது. 

பெரும்பாலான வளைகுடா நாடுகள் தேர்ந்தெடுக்கப்படாத,  முடியாட்சி முறையைப் பின்பற்றும் நிலையில், அந்நாடுகளில் மக்கள் ஆதரவும் அனுதாபமும் பாலத்தீனர்கள் பக்கம் இருந்தாலும் மத்தியக் கிழக்கு ஆட்சியாளர்களின் கவனம்,  பாலத்தீன தேசியவாதத்துக்கு உதட்டளவில் மட்டும் அனுதாபம் காட்டுவதாக இருந்திருக்கிறது என்பது பாலத்தீன ஆதரவாளர்களின் குமுறல்.

பாலத்தீன தேசியவாதம் என்பது தத்தம் நாடுகளில், அரசுகளின் கொள்கைகளுக்கு சவாலாக எழக்கூடாது என்பதில் சவுதி அரேபியா போன்ற அரசுகள் கவனமாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. 

இந்தப் பின்னணியில்தான் ஈரானின் பாலத்தீன ஆதரவு அரசியல் அமைந்திருக்கிறது;  பாலத்தீன லட்சியத்துக்கு ஈரான் காட்டும் ஆதரவு , அதன் இஸ்ரேல்- அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையின் ஒரு வெளிப்பாடு, மற்றும் பிராந்தியத்தில் நிலவும் ஷியா – சன்னி அரசியலின் எதிர் விளைவு என்று கருதப்படுகிறது.  

மத்திய கிழக்கு நாடுகள்

இந்தப் பின்னணியில்தான் ஈரானின் அணு சக்தித் திட்டங்களை சந்தேகத்துடன் பார்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் அணு வல்லமை பெறுவதைத் தடுக்க பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டன. 

பராக் ஒபாமா காலத்தில் 2015-ல்  போடப்பட்ட ஈரான் ஒப்பந்தம், இரான் அணுசக்தித் திட்டங்களை அணு ஆயுத வல்லமை பெற பயன்படுத்தாமல் தடுக்கப் போடப்பட்டது.  

ஆனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் 2018ல் அமெரிக்காவை விலக்கிக்கொண்ட நிலையில்,  ஈரான் இந்த ஒப்பந்தத்தை இனி பின்பற்றப்போவதில்லை என்று 2020ல் அறிவித்தது. 

ஈரானின் இந்த அணுஆயுத வல்லமை பெறும் சாத்தியக்கூற்றை, அப்பிராந்தியத்தின் சவுதி அரேபியா போன்ற சன்னி அரபு நாடுகளும் கூட விரும்பவில்லை. 

இதனைப் பயன்படுத்திக்கொண்ட டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலுடன் அரபு நாடுகளின் உறவுகளை சீரமைக்க பல முயற்சிகளை எடுத்தது.  அந்த முயற்சியின் ஒரு விளைவுதான் ஆப்ரஹாம் ஒப்பந்தங்கள் (Abraham accords) என்று வர்ணிக்கப்படும் ,  இஸ்ரேல்- பஹ்ரென், இஸ்ரேல் – எமிட்ரேட்டுகள் ஒப்பந்தம்.  

பாலத்தீன பிரச்னையைப் பற்றி பெரிதும் பேசாத இந்த ஒப்பந்தங்களில் அரபு நாடுகளே கையெழுத்திட்டு இஸ்ரேலுடன் ராஜ்ய உறவுகளை தொடங்க முன்வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த ஒப்பந்தத்தில் பின்னர் மொரொக்கோவும், சூடானும் இணைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவும் இந்த ஒப்பந்தத்தை எட்டிவிட்டால், பாலத்தீனர்களை அரபு நாடுகள் கைவிட்டதுபோலத்தான் என்று ஒரு கருத்து இருந்த நிலையில்தான்,  கடந்த அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்கள் இஸ்ரேலில் நடந்தன. 

இஸ்ரேல் – ஈரான்

இந்த தாக்குதல்களை ஈரான் தூண்டிவிட்டு நடத்தியிருக்குமோ என்ற சந்தேகம் பரவலாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டதற்குக் காரணம், இந்த தாக்குதலின் முதல் விளைவு , ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் அல்லது அது போன்ற ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதா என்பது குறித்து சவுது அரேபியா ஆலோசித்துக்கொண்டிருக்கும்போது இந்தத் தாக்குதல் நிகழ்ந்து, அது  சவுதி அரேபிய – இஸ்ரேல் உறவுகள் மற்றொரு கட்டத்துக்கு வருவதை தாமதப்படுத்தியிருக்கின்றது என்பதுதான் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

 இந்தப் பின்னணியில்தான் ஈரான்-இஸ்ரேல் உறவுகளில் நிலவும் பதற்ற நிலையைப் பார்க்கவேண்டும். 

ஈரானின் தளபதி சுலைமானியை பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா தாக்கி படுகொலை செய்தது,  பின்னர் ஈரானிய ராணுவ உயர் அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மொஹமது ரேஸா ஸஹேதி , சிரியாவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டது ஆகியவை ஈரானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்.

இந்த தாக்குதல்களை அடுத்து ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹானியே ஈரானியத் தலைநகரிலேயே கொல்லப்பட்டது,  கடந்த மாதம் நடந்த நசரல்லா கொலை ஆகியவை இரானை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுக்க வைத்திருக்கின்றன. 

ஆனால் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஈரான் மீது இஸ்ரேல் பழி தீர்க்கப்போவதாக சூளுரைத்திருக்கிறது.

ஈரான் ஹமாஸைப் போலவோ அல்லது ஹிஸ்புல்லா போலவோ நாடு இல்லாத இயக்கம் அல்ல.  இஸ்ரேல் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பமும்,  அமெரிக்க ஆதரவும் ஈரானுக்கு இல்லை எனினும், இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பிராந்தியப் போராக மேலும் வலுப்பெற வாய்ப்புகள் உண்டு. 

அந்த மாதிரி ஒரு போர் உருவானால், அதன் அரசியல், பொருளாதார விளைவுகள் வெகு காலத்துக்கு உலக நாடுகள் மத்தியில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs