J&K: பலன் தராத பாஜக யுக்தி; `INDIA’ கூட்டணிக்கு உதவிய வாக்குறுதி – ஜம்மு காஷ்மீரில் வென்றது எப்படி?!

10 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் பிரதேசம். 2019-ல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறிய நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளில், `இந்தியா’ கூட்டணியின் கைகள் ஓங்கியிருக்கின்றன… அதன் காரணம் என்ன?

தொகுதி மறுவரையறையும்… நியமன எம்.எல்.ஏக்களும்!

சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. 2020-ல், தொகுதி மறுவரையறை தொடர்பான பேச்சுகள் எழுந்தபோதே, `இது தேவையில்லாத விஷயம். மறுவரையறை செய்வது பா.ஜ.க-வுக்கே சாதகமாக முடியும்’ என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத பா.ஜ.க, மறுவரையறை செய்வதில் உறுதியாக இருந்தது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

புதிய தொகுதி மறுவரையறையின்படி, ஜம்மு பகுதியில் 43 தொகுதிகள், காஷ்மீர் பகுதியில் 47 தொகுதிகள் என மொத்தம் 90 தொகுதிகள் இருக்கின்றன. மறுவரையறையின்படி, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு பகுதிக்கு ஆறு தொகுதிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. அதுவே, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீர் பகுதிக்கு ஒரு தொகுதி மட்டுமே புதிதாகக் கிடைத்திருக்கிறது. மாநிலக் கட்சிகளோ, `தாங்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக தொகுதிகளை மறுவரையறை செய்திருக்கிறது பா.ஜ.க’ என்று குற்றம்சாட்டின.

மறுவரையறை பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராகத் தீவிரப் பிரசாரங்களை மேற்கொண்டன. ஓமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸுடன் கைகோத்தது. மெகபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனித்துக் களமிறங்கியது. அதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகளும் தனித்துக் களமிறங்கினர். இதனால், `இந்தியா’ கூட்டணியின் வாக்குகள் பலவாறாகச் சிதறும் அபாயம் ஏற்பட்டது. இருந்தும், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் கை ஓங்கியிருக்கிறது.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளியாக சில தினங்களே இருந்த நிலையில், `ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள், துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்’ என்ற அறிவிப்பு வெளியானது. `பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், காஷ்மீரி பண்டிட்கள், பெண்கள் என அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கவே இந்த நியமனங்கள்’ என்றது பா.ஜ.க. ஆனால் எதிர்க்கட்சிகளோ, “தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், வெற்றியைத் தங்கள் வசப்படுத்தவே பா.ஜ.க இதைச் செய்கிறது” என்று குற்றம்சாட்டின.

தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருப்பதால், நியமன எம்.எல்.ஏக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள் என்று தெரிகிறது. பா.ஜ.க-வுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், 49 தொகுதிகளில் வென்றிருக்கிறது இந்தியா கூட்டணி. மெகபூபா முஃப்தியின் பி.டி.பி கட்சி 3 இடங்களை பிடித்திருக்கிறது. இந்தியா கூட்டணியில் தேசிய மாநாடு கட்சியானது 42 இடங்களை வென்றிருக்கிறது. காங்கிரஸ் 6 இடங்களை கைபற்றியுள்ளது.

மெகபூபா முஃப்தி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை ஏற்படலாம் என சொல்லப்பட்ட நிலையில், `இந்தியா’ கூட்டணியே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

`இந்தியா’ கூட்டணி வென்றது எப்படி?

ஏழு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை. இதனால், வேலைவாய்ப்பில், இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாக மாறியது ஜம்மு காஷ்மீர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு சுற்றுலாத்துறையும் முடங்க, வளர்ச்சியிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், பொருளாதாரரீதியாகப் பல சிக்கல்களை எதிர்கொண்டனர் காஷ்மீர் மக்கள்.

இதற்கிடையில், `ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மாநிலத்துக்குத் தேவையான விஷயங்கள் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். யூனியன் பிரதேசமாக இருந்தால், மத்திய அரசின் ஆதிக்கமே அதிகமிருக்கும்’ என்ற குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. முடங்கிய வளர்ச்சியும், மாநில அந்தஸ்து கோரிக்கையும் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உண்டாக்கின. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட `இந்தியா’ கூட்டணிக்கு வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

Omar Abdullah

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள ஐந்து மக்களவைத் தொகுதியில், இரண்டில் மட்டுமே போட்டியிட்டது பா.ஜ.க. இந்துக்கள் பரவி வாழும் ஜம்மு பகுதியிலுள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த நம்பிக்கையோடு, சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு பகுதியில் மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 35-க்கும் மேல் தன் வசப்படுத்த முயன்றது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க நினைத்தது தற்போது நடக்கவில்லை.

காரணம், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, `ஜம்மு காஷ்மீர் மிகவும் பாதுகாப்பான பூமியாக மாறும்’ எனத் தொடர்ந்து பிரசாரம் செய்தது பா.ஜ.க. ஆனால், மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பிறகு, ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஒன்பது தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக அமைதி நிலவிவந்த, ஜம்மு பகுதியில்கூட சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாதுகாப்பில் கோட்டைவிட்ட மத்திய அரசின் அலட்சியத்தால் நடந்த இந்தத் தாக்குதல்கள், ஜம்முவில் பெரும்பான்மையாக இருக்கும் பா.ஜ.க வாக்காளர்கள் மத்தியில்கூட அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்த அதிருப்திகளை லாவகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஓமர் அப்துல்லா – ராகுல் காந்தி இணை, தீவிர பிரசாரங்கள் மூலம் வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம் என `இந்தியா’ கூட்டணி கொடுத்த வாக்குறுதி மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கிறது. யூனியன் பிரதேசங்களில், துணை நிலை ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதால், மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் காஷ்மீர் மக்கள் உறுதியாக இருந்தனர். எனவே, பா.ஜ.க-வின் `டபுள் இன்ஜின் அரசு’ என்ற பிரசாரம் ஜம்மு காஷ்மீரில் எடுப்படவில்லை என்பது தெரிய வருகிறது” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs