உடல்நலக் குறைவினால் டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிற்துறையில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. 1937-ம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது வயது 86.
மும்பையில் வசித்து வரும் இவருக்கு இன்று காலை ரத்த அழுத்த அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனையடுத்து இவரை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவருக்கு இதய நல நிபுணர் டாக்டர் ஷாருக் அஸ்பில் கொல்வல்லா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை தருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரத்தன் டாடா தனது எக்ஸ் பக்கத்தில், “எனது உடல்நிலை குறித்த சமீபத்திய வதந்திகளை தெரிந்துக்கொண்டேன். அவை ஆதாரமற்றவை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தற்போது எனது வயது மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவ பரிசோதனையில் இருக்கிறேன். கவலைப்படுத்துவது மாதிரி எதுவும் இல்லை. நான் நலமாக உள்ளேன். பொதுமக்கள் மற்றும் மீடியா பொய் தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.