`மேலே சாகசம், கீழே சோகம்’ என்ற கதையாக நடந்து முடிந்திருக்கிறது சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி!
முதல்கோணல் முற்றிலும் கோணல்:
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்டோபர்-6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் மக்கள் கலந்துகொண்டார்கள். காலை 11 மணிக்கு மெரினாவில் தொடங்கும் நிகழ்ச்சிக்கு, சென்னை மட்டுமல்லாது இதர பகுதிகளிலிருந்தும் காலை 8 மணியளவிலிருந்தே பொதுமக்கள் படையெடுக்க ஆரம்பித்திருந்தனர். அண்ணாசாலை மார்க்கமாக மெட்ரோ ரயிலில் வந்தவர்கள் சுமார் 4 கி.மீ நடந்துவந்து மெரினாவை வந்தடைந்தனர். அன்றைய தினம் மெட்ரோவில் மட்டுமே 4 லட்சம்பேர் பயணித்திருக்கின்றனர். அதேநேரம் மெரினாவுக்கு வரும் `சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி’ வழித்தட பறக்கும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் வழக்கமாக `அரை மணிக்கு ஒரு ரயில்’ என்ற கணக்கில் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கி, ஆபத்தானமுறையில் தொங்கியபடியே பயணம் மேற்கொண்டுவந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கார்கள், இருசக்கர வாகங்களில் வந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க்கிங் செய்துவிட்டு கடற்கடையை நோக்கி வருவதற்குள் ஒருவழியாகிவிட்டனர்.
தொடக்கத்தில் மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலை பொதுமக்கள் நடக்கும் இடம், விஐபி வாகனங்கள் செல்லுமிடம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சி பகுதிக்குச் செல்லும் வழித்தடங்கள் காவல்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடும்பம் குழந்தைகளுடன் பெரும் உற்சாகமாக கடற்கரையில் குவிந்தனர். நிகழ்ச்சியைக்காண முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடனும் அமைச்சரவை சகாக்களுடனும் கலந்துகொண்டார். சரியாக 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. போர் விமானத்திலிருந்து விமானப்படை வீரர்கள் குதித்து பாராசூட்டில் பறந்தபடியே வான் சாகசங்களில் ஈடுபட்டனர்.
சுட்டெரித்த வெயில்… சுருண்டு விழுந்த மக்கள்:
தற்காலிகப் பந்தல்களிலும், கடற்கரை உள்சாலைகளின் பந்தல்களிலும் அமர்ந்திருவர்களைத் தவிர, மற்றவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம். கடும் வெயிலில் நீண்ட நேரம் விமான சாகசங்களை அண்ணாந்து பார்த்த மக்கள் நேரம்செல்லச் செல்ல வெயிலின் உக்கிரத்தால் தலைசுற்றி மயக்கமடையத் தொடங்கினர். குடைகள் சகிதம் வந்தவர்கள் சிறிது தாக்குப்பிடித்தாலும், மற்றவர்கள் வயது வித்தியாசமின்றி வரிசையாக மயங்கி விழத் தொடங்கினர். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்ககூட வசதிகள் இல்லை. மருத்துவ உதவிக்காக தூக்கிச் செல்வதற்கும்கூட போதுமான மருத்துப் பணியாளர்கள் இல்லை.
மெரினா சாலையொட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் குடிநீர் சின்டெக்ஸ் டேங்கும், அவசர உதவிக்கான வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதற்கு மாறாக விமான சாகசம் நடைபெற்ற இடமும், பெரும்பாலான மக்கள்கூட்டம் திரண்டிருந்ததும் வெயில் கொளுத்தும் வெட்டவெளி கடற்கரை மணலில்தான். அங்கு கண்காணிப்புக்கு இருந்த காவலர்களின் எண்ணிக்கையோ மிகவும் சொற்பம். மயக்கமடைந்தவர்களைப் பார்த்து அவர்களால் ஆறுதல் அளிக்க முடிந்ததேதவிர, உடனடி சிகிச்சைக்காக கடற்கரையிலிருந்து மருத்துவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிலிருக்கும் சாலைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. உதவியற்ற நிலையில் பெற்றோர்கள் மயங்கி விழுந்த தங்கள் குழந்தைகளையும், வயதான பெண்களையும் கைத்தாங்களாக நடத்தியே அழைத்துவந்த கொடுமைகளும் அரங்கேறின.
உணவு, குடிநீர் பற்றாக்குறை:
விமான சாகசங்கள் தொடங்கிய அரைமணி நேரத்தில் வெயிலின் கோரத்தை தாங்கமுடியாமல் பலர் திரும்பிச்செல்ல முயன்றனர். ஆனால், கட்டுக்கடாங்காத கூட்டத்தால் வெளியேறும் வழித்தடங்கள் தெரியாமல் அங்கேயே தலையில் துண்டைவிரித்து அமர்ந்தனர். நேரம் செல்லச் செல்ல வியாபாரிகள் கொண்டுவந்த தண்ணீர் பாட்டில்களும், பழங்கள், ஐஸ் கிரீம்ஸ், ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வேகமாக விற்பனையாகின. அதற்கேற்ப விலையும் பன்மடங்கு அதிகரித்தன. ஒருகட்டத்தில் எவ்வளவு பணம்கொடுத்தாலும் கிடைக்காத அளவுக்கு மொத்தமாக விற்றுத்தீர்ந்தன.
`எல்லா வழிகளையெல்லாம் அடைச்சுட்டாங்க, இனிமே எங்க இடத்துக்குப் போய் கொண்டு வரமுடியாதுங்க சார். அவ்வளவுதான் எல்லா ஸ்டாக்கும் முடிஞ்சுது!’ என ஐஸ்கிரீம் வியாபாரிகள் முதற்கொண்டு அனைத்து வியாபாரிகளும் ஒரேகுரலாய் ஒலித்தனர்.
அரசு அமைத்திருந்த குடிநீர் சின்டெக்ஸ் டேங்குகளும் ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தன. கடும் வெயிலில் நீர்ச்சத்து குறைந்து, பசி மயக்கத்தில் கிட்டத்தட்ட `உயிர்ப் பிழைத்து, வீடுவந்து சேர்ந்தால் போதும்’ என்ற மனநிலைக்கே பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
சாலை நெரிசல் மூச்சுவிடத் திணறிய மக்கள்:
விமான சாகச நிகழ்ச்சிகள் மதியம் 1 மணிக்கு முடிவடைந்த நிலையில், விழா பந்தலில் ஏசி குளுரூட்டிகள், மின்விசிறிகளில் அமர்ந்திருந்த வி.ஐ.பிகளெல்லாம் முந்திக்கொண்டு தங்களின் காரில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், பொதுமக்கள் செல்வற்கு வழியின்றி கூட்டநெரிசலில் சிக்கித் திணறினர். குறிப்பாக, காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் தொடங்கி உழைப்பாளர் சிலை நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் நெருக்கடியடித்துக்கொண்டு நின்றனர். ஆனால் கூட்டம் ஒரு இம்மியளவுகூட நகரவில்லை. காமராஜர் சாலையின் இணைப்பு சாலைகளான ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை என அனைத்திலும் கூட்டம் அலைமோதியது. மக்கள்கூட்டத்தின் நடுவே வாகனங்களும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில், ஒரேயொரு காவல்துறையினர்கூட மக்களின் உதவிக்காக வரவில்லை. சாலையை ஒழுங்குசெய்ய ஒரு போக்குவரத்து காவல்துறையினரைக்கூட காணமுடியவில்லை. சுமார் 2 மணிநேரமாக நகரவோ, அமரவோ வழியில்லாமல் காமராஜர் சாலையிலேயே வெயிலில் மூச்சுத்திணறியடி நின்றனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கலைந்து சென்று இயல்புநிலைக்கு வரவே மாலை 5 மணிக்கு மேலானது! இந்த நிலையில், மெரினா சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்களில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கண்டனம் தெரித்த அரசியல் தலைவர்கள்:
குறிப்பாக தி.மு.க எம்.பி. கனிமொழி கருணாநிதி, “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்றிருக்கிறார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என விமர்சித்திருக்கிறார்.
அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும், பொதுக்கூட்டத்துக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, கெடுபிடி செய்யும் ஆட்சியாளர் பெருந்தகைகள், கடற்கரையில் 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள் எனும் அடிப்படைக்கேள்விக்கு என்னப் பதிலுண்டு? கடந்த 29-ம் தேதி அன்று வான்படை துணைத் தளபதி ஊடகத்தினரிடம் 15 இலட்சம் மக்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்யவிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிற நிலையில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்துவிட்டது என்று இன்று திசை திருப்புவதன் காரணம் என்ன?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோல வி.சி.க தலைவர் திருமாவளவன், “தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!” என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
விளக்கமளித்த தமிழ்நாடு அரசு:
இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன” என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பதிலளித்திருக்கிறார்.
அதேசமயம், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
`பாதிக்கப்பட்ட மக்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்காமல், மக்களையே முட்டாளாக்கும் வகையில் பதிலளிப்பதை எப்போது நிறுத்தப்போகிறதோ அரசுகள்?’
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…