காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சாதனங்கள், 7 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளவில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலைகளில், உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது இந்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலைதான்.
இந்த தொழிற்சாலை மூலம் மட்டும் ஆண்டுக்குப் பல மில்லியன் வருமானம் ஈட்டிவரும் இந்த நிறுவனம், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும், அடிமாட்டு விலையில் ஊதியம் வழங்கி, அதிக நேரம் வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை செய்து வருவதாக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குமுறுகிறார்கள். அதனால், தொழிற்சங்கம் அமைப்பது, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் நிறுவன ஊழியர்கள் 25 நாள்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டுப் பேசியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.
அடிப்படையான நம் நாட்டின் சட்டத்தைக்கூட தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், நம் விகடன் பக்கத்தில், இது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
அதில், “சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை….” – போதுமான அளவில் இல்லை – போதுமானதாக உள்ளது.. – மெத்தனமாக செயல்படுகிறது என மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்தோம். இதில் வாக்களித்த வாசகர்களில், போதுமான அளவில் இல்லை என 58 சதவிகித வாசகர்களும், போதுமானதாக உள்ளது என 18 சதவிகித வாசகர்களும், மெத்தனமாக செயல்படுகிறது என 32 சதவிகித வாசகர்களும் தெரிவித்திருக்கின்றனர்.