இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
அதன்படி அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலிருந்து கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதியம் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலிலும், வெயிலிலும் காத்திருந்து பார்த்த மக்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, ” உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவறான அண்ணாமலை, ” 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு. தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ” சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். சென்னையில் சாகச நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தன் கடமையில் இருந்து தவறிவிட்ட தமிழக அரசே உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ” மாநில அரசின் கவனக்குறைவால் வான்படை சாகச நிகழ்வு சாதனையாக அல்லாமல் வேதனையாக மாறிவிட்டது. இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். தன்நலன் பேணாது மக்கள் நலன் பேணும் அரசே மக்களுக்கான அரசு” என்று தெரிவித்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடுமையான விமர்சனக்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb