விஜயனுடன் மோதல்; ஸ்டாலினுடன் சந்திப்பு?- கேரளாவில் DMK (Democratic Movement Of Kerala) தொடங்கிய MLA!

கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். சி.பி.எம் ஆதரவுடன் மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற பி.வி.அன்வர், இப்போது பினராயி விஜயனுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். பினரயி விஜயனின் ஆட்சி நிர்வாகத்தில் பல குழறுபடிகள் உள்ளதாகவும், அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறையில் ஏ.டி.ஜி.பி அஜித்குமார் அதிக சொத்துகளை குவித்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்ததாகவும் பேசி கடந்த சில வாரங்களாக அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், பினராயி விஜயனுக்கு எதிராக தனது தொகுதியான நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு  பகுதிகளில் மக்களை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதையடுத்து தனி கட்சி தொடங்க முடிவுசெய்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி நிர்வாகிகள் சிலரையும் சென்னையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க (டி.எம்.கே) கட்சியை கேரளாவிலும் தொடங்கும் திட்டத்துடன் பி.வி.அன்வர் காய் நகர்த்தி வருவதாக, அவர் தரப்பில் சொல்கிறார்கள். தி.மு.க நிர்வாகிகளை சந்தித்தது குறித்த தகவல்களை பி.வி.அன்வரின் மகன் சில மீடியாக்களிடம் கசியவிட்டுள்ளார். இந்த நிலையில் மலப்புறம் மாவட்டம், மஞ்சேரியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்திய பி.வி.அன்வர் டி.எம்.கே என்ற இயக்கத்தைத் தொடங்கினார். டொமாக்ரட்டிக் மூவ்மென்ட் ஆஃப் கேரளா என்பதன் சுருக்கமே டி.எம்.கே ஆகும். முதலில் இயக்கமாக கட்டமைத்துவிட்டு அடுத்ததாக கட்சியாக மாற்றும் திட்டத்தை வைத்திருக்கிறாராம் பி.வி.அன்வர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
பி.வி.அன்வர் எம்.எல்.ஏ

டி.எம்.கே தொடக்க விழா மேடையில் பி.வி.அன்வர் எம்.எல்.ஏ பேசுகையில்,”நான் சென்னை சென்று தி.மு.க தலைவர்களை சந்தித்தது உண்மைதான். இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச கட்சிதான் தி.மு.க. பாசிச சக்திகளை தமிழ்நாட்டில் நுழைய விடாத கட்சிதான் தி.மு.க. அப்படிப்பட்ட ஒரு தலைவரை தேடிப்போகாமல் இருக்க முடியுமா. அக்கட்சியின் தலைவரையும், கட்சியினரையும் நான் சந்தித்தேன். பாசிசத்தின் மற்றொரு முகமாக கேரள முதல்வர் உள்ளார். கேரளாவைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு அரசு செயலாளர் சென்னைக்கு போயுள்ளார். அங்கு ஏர் ஷோ-வில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினை தேடிப்பிடித்து பேசியுள்ளார். ஒருவேளை நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கூட்டு வைத்தால் கேரள அரசு எனக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கும்” என்றார்.