J & K – Haryana Election Results : ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! |Live Updates

ஹரியானா தேர்தல்!

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது.

ஹரியானாவில் 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்துக்கு, அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த கட்சிகளாகக் கருதப்படும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தனித்துக் களம் கண்டன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் அணியில் சேராமல் தனித்தனியே போட்டியிட்டன. இது தவிர ஜே.ஜே.பி, ஏ.எஸ்.பி ஒரு கூட்டணி, ஐ.என்.எல்.டி, பகுஜன் சமாஜ் ஒரு கூட்டணி எனக் கைகோத்து இந்தத் தேர்தலில் நின்றன.

ஹரியானா சட்டமன்ற தேர்தல்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை எனப் பல பிரச்னைகளால் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ‘பா.ஜ.க’வின் மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘பா.ஜ.க’வின் மீது ஹரியானா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அதைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் வியூகம் வகுத்திருக்கும் காங்கிரஸ் என ஹரியானா சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்திருந்தது. மேலும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிறுத்தப்படிருக்கும் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் கவனம் பெற்றிருக்கிறார். இப்படியானப் பல்வேறு காரணங்களால் ஹரியானா தேர்தல் முடிவுகள் அரசியலில் உற்று கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

நாளை காலை இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. இது குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்!

ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்!

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது.

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டது, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல், செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும், இறுதிகட்ட தேர்தல் கடந்த 1-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான (55.40 சதவிகிதம்) வாக்குகளை விட, சட்டமன்றத் தேர்தலில் (63.45 சதவிகித) அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனால் இந்தச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கூடுதல் கவனம் பெற்றிருக்கின்றன. நாளை இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. இது குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்…

ஜம்மு – காஷ்மீர்  மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. இந்த தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்!