தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிறப்பால் பதவி கிடைப்பது தி.மு.க-வில். உழைப்பால் பதவி கிடைப்பது அ.தி.மு.க-வில் மட்டும்தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறப்பால் மட்டுமே பதவிக்கு வந்தவர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது.
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள். அதை நிறைவேற்றவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை எனச் சொல்லி, ஒரு செங்கலை தூக்கிக் கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினை ’செங்கல் நிதி’ என மக்கள் அழைக்கிறார்கள். தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் இருக்கும் 39 எம்.பி.,க்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
செந்தில் பாலாஜி மீது உள்ள பயத்தினால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர்.செந்தில் பாலாஜி கெட்டிக்காரர்தான். அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் தி.மு.க உள்ளது. தொண்டனை நம்பி கட்சி தொடங்கியவர் எம்.ஜி.ஆர்.
சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். தற்போதும் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், ’எம்.ஜி.ஆர் மன்றம்’ என்று ஆரம்பித்து கட்சியாக தொடங்கியது அ.தி.மு.க மட்டுமே. ஆந்திரா, தெலுங்கானா போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.” என்றார்.