The Legend of Maula Jatt: உலக அளவில் ஹிட் அடித்த பாகிஸ்தான் திரைப்படம் – இந்தியாவில் தடை!

பாகிஸ்தானிலும் சில உலக நாடுகளிலும் ஹிட் அடித்த தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜட் (The Legend of Maula Jatt) திரைப்படம், இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் பாகிஸ்தானில் பஞ்சாபி மொழியில் 1979ம் ஆண்டு வெளியான படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. பிலால் லஷாரி என்பவர் இயக்கியுள்ளார். பாகிஸ்தானின் முன்னணி நடிகர்களாக திகழும் ஃபவாத் கான், ஹம்சா அலி அப்பாஸி, மஹிரா கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாகிஸ்தானிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டத் திரைப்படம் இதுதான் என்கின்றனர். 2022ம் ஆண்டிலேயே பாகிஸ்தானிலும் பல உலக நாடுகளிலும் வெளியான இந்தத் திரைப்படம், பாகிஸ்தான் திரையுலகில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல்படம் என்ற சாதனையைப் படைத்தது. ஒட்டுமொத்தமாக ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு எந்த பாகிஸ்தானி திரைப்படமும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த படத்தை வெளியிட அதன் விநியோகிஸ்தரான ஜீ நிறுவனம் முயற்சியெடுத்தது.

பட வெளியீடு குறித்த அறிவிப்பு வரும்போதே மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மான் சேனா அரசியல் கட்சி இந்த படத்தை தடை செய்ய குரலெழுப்பியது. தொடர்ந்து பல கண்டனக் குரல்கள் எழுந்ததால் பஞ்சாபில் மட்டும் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டனர்.

நீதிமன்றம் இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இந்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை இந்தப் பட வெளியீட்டை தடை செய்ததாக தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் நடிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

2016ம் ஆண்டு உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தடை செய்தது இந்தியா. 2019-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் உருவான நிலையில் இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாக தடை விதித்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் The Legend of Maula Jatt வெளியிடுவதற்கான முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டன.