சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு இருப்பதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடுவும் விதித்திருக்கிறது. முன்னதாக, பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா, சிறைச்சாலைகளில் தலித்துகள் தனித்தனி சிறைகளிலும், மற்ற சமூகத்தினர் தனித்தனி சிறைகளில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடுகளைக் களையும் வண்ணம், மாதிரி சிறை கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலைகள் & சீர்திருத்தச் சேவைகள் சட்டம் 2023 ஆகியவற்றில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், சந்திரசூட் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில், “சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளையும் ஒதுக்குவதும், சமைப்பது போன்ற வேலைகளை மற்ற சாதியினருக்கு வழங்குவதும் அரசியலமைப்பின் 15-வது பிரிவை மீறுவதாகும். சிறைச்சாலைகளில் இத்தகைய நடைமுறைகள் தொழிலாளர் பிரிவினைக்கு வழிவகுக்கும். சாதி அடிப்படையில் பணி நியமனம் செய்வதை அனுமதிக்க முடியாது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய தங்களின் வலியையும், வேதனையையும் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய அணுகுமுறை நமக்குத் தேவை. அனைத்து இடங்களிலும் இருக்கும் பாகுபாட்டை நாம் அடையாளம் காண வேண்டும். சாதியின் வரையறைகள் இரும்பால் ஆனவை. சில நேரங்களில் அவை நம் கண்ணுக்கு அகப்படாது. ஆனாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தால் உடைக்க முடியாத அளவுக்கு அவை வலுவாக இல்லை.
டாக்டர் அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையில் தனது கடைசி உரையின்போது, `இந்தியாவின் எதிர்காலம் என்ன?’ என்று தனது கவலையை வெளிப்படுத்தினார். அந்தக் கவலை இன்றும் உண்மையாக அப்படியே இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சாதிய பாகுபாடு என்ற தீமையை நம்மால் ஒழிக்க முடியவில்லை. நீதி மற்றும் சமத்துவத்துக்கான தேசிய பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 17, 21, 23 ஆகிய பிரிவுகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று அறிவிக்கப்படுகின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் தீர்ப்பின்படி சிறைக் கையேடுகள் மற்றும் விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “மாதிரி சிறைக் கையேடு 2016-ன் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் மற்றும் பார்வையாளர்கள் வாரியம் ஆகியவற்றில் சாதி அடிப்படையிலான பாகுபாடு அல்லது அத்தகைய பாரபட்சமான நடைமுறைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வழக்கமான ஆய்வுகளை நடத்த வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இந்தத் தீர்ப்பின் நகலை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.