ஹரியானா சட்டமன்றத்திற்கு இன்று பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பா.ஜ.கவிற்கு இருக்கும் எதிர்ப்பு அலையை பயன்படுத்தி எப்படியும் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 90 தொகுதிகளுக்கு இன்று காலையில் தொடங்கிய தேர்தலில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் குருஷேத்ரா மக்களவைத் தொகுதி பா.ஜ.க எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜிந்தால் வித்தியாசமான முறையில் குதிரையில் வந்து வாக்களித்தார்.
தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் அளித்த பேட்டியில், ”மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் பா.ஜ.கவிற்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குதிரையில் வருவது நல்லது என்பதால் குதிரையில் வாக்களிக்க வந்தேன். ஹிசார் தொகுதியில் போட்டியிடும் எனது தாயார் அத்தொகுதி மக்களுக்கு நிறைய உழைக்க விரும்புகிறார். எனவே ஹிசார் தொகுதி மக்கள் யாரை தேர்வு செய்யவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்” என்றார். பா.ஜ.க வெற்றி பெற்றால் யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று கேட்டதற்கு, “அனில் எங்களது கட்சியில் மிகப்பெரிய தலைவர். யார் முதல்வராக வேண்டும் என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஒரு பெரிய தலைவர் பெயர் எனது மனதில் இருக்கிறது. அவர்தான் சரியான தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்”என்றார்.
தொழிலதிபர் நவீன் ஜிந்தால் தாயார் சாவித்ரி ஜிந்தால் பா.ஜ.க சார்பாக ஹிசார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஏற்கெனவே ஹிசார் தொகுதியில் சாவித்ரி பல முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இதற்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஆனால் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு அவரது மகன் நவீன் ஜிந்தால் பா.ஜ.க-வில் சேர்ந்ததார். இதனால் சாவித்ரி காங்கிரஸ் சார்பாக போட்டியிடவில்லை. இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய லோக் தள்-பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. காலை 12 மணி வரை ஹரியானாவில் 25 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.