“ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!” – பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்… துணை தாசில்தார் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன். கடந்த 2002 – ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். பெற்றுள்ளார்.

இதில், மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு கடந்த 5.3.2024 – ஆம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார்.

லஞ்சம்

அதன் பெயரில், இவருடைய மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை பரிந்துரை செய்து லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யக்கோரி தான் விண்ணப்பித்து ஆறு மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார்.

இறுதியாக, மோகன் கடந்த கடந்த மாதம் 26- ஆம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து தனது நிலத்திற்கான பட்டாவில் பெயர் திருத்தம் செய்து கொடுக்குமாறு மீண்டும் வற்புறுத்திக் கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டாட்சியர் ரவிக்குமார், ரூ.50000 கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக கூறியுள்ளார். பேரம் பேசி இறுதியாக, ரூ.20,000 கொடுத்தால் வேலை முடிக்கிறேன். அதில் ஒரு ரூபா குறைந்தால் கூட வேலை நடக்காது. பெயர் மாற்ற நான் பரிந்துரை செய்யமாட்டேன்’ என்று ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

ரவிக்குமார்

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம் அளித்த புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின் படி, இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற மோகன், துணை வட்டாட்சியர் ரவிக்குமார் கேட்டபடி ரூ.20,000 லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்வதற்காக துணை வட்டாட்சியர் ஒருவர் ரூ. 20,000 லஞ்சம் கேட்டு கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…