மதுரை: வீட்டை எழுதி கேட்ட நபர் – மிரட்டிய கும்பலுக்கு ஆதரவாக வந்த துணை மேயர்? ; 5 பேர்மீது வழக்கு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கோழிக்குமார் என்ற குமார் என்பவரிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

`கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன், அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள்’ என குமாரிடம் வசந்தா கேட்டதாகவும், அவரோ, `15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை கிரயம் செய்து கொடுக்க வேண்டும்’ என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

துணை மேயர் நாகராஜன்

இதனையடுத்து, ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதிக்கேட்டு தன்னை மிரட்டி தாக்கியதாக குமார் (எ) கோழிக்குமார், கணேசன் (எ) வாய் கணேசன், முத்து (எ) புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீதும் கடந்த மே மாதம் 7-ம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வசந்தா புகார் அளித்தார். மூவர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த ஜூலை 30-ம் தேதியன்று சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மதுரை துணைமேயர் நாகராஜன், அவரின் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர்  கோழி குமாருக்கு ஆதரவாக வந்து வீட்டை எழுதிக் கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும், தங்களை பொது இடத்தில் வைத்து கற்களால் தாக்க முயன்றதோடு, சாதி ரீதியாக ஆபாசமாக பேசியதாகவும், அப்போது, எங்கள் வீட்டு மகள் பொது இடத்தில் ஆபாசமாக திட்டாதீர்கள் என கூறியதற்கு  துணைமேயர் அவருடைய பாதுகாப்புக்கு வந்த போலீசிடம், இவங்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளு என்று கூறி மிரட்டியதாகவும் காவல்துறையில் வசந்தா தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

மூதாட்டி வசந்தா அவரின் மகன் முருகானந்தம் ஆகியோர், `ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் இருதரப்பினரும் சமரசம் ஆனதுபோல எழுதி வாங்கியதாகவும், எங்களது வீட்டை எழுதி வாங்க மிரட்டி வரும் கோழி குமாரின் ஆதரவாளர்களான துணைமேயர் நாகராஜன் அவரது தம்பி ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் சிசிடிவி ஆதாரத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக மூதாட்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட குற்றவியல் 4-ஆவது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

துணை மேயர் நாகராஜன்

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரின் சகோதரர் ராஜேந்திரன், குமார் (எ) கோழிகுமார், முத்துச்சாமி (எ) குட்டமுத்து, மற்றும் முத்து ஆகிய 5 பேர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 189(2) சட்ட விரோதமான கும்பலில் உறுப்பினராக இருப்பது, 296(b) பொது இடத்தில் ஆபாச  சொற்கள் பயன்படுத்தியது, 329(4) வீட்டினுள் அத்துமீறல் குற்றம் செய்தல்,115(2) தன்னிச்சையாக காயம் விளைவித்தல், 351(3) மரணம் விளைவிப்பதாக மிரட்டல் , பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk