Metro: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட ரயில் திட்டத்துக்கு நிதி; ஓகே சொன்ன மத்திய அரசு – எவ்வளவு தெரியுமா?!

‘தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை’, ‘தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என்று கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு தரப்பிலிருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மனு வழங்கியப்போதும் ‘2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை இடம்பெற்றிருந்தது.

இந்தக் குரல்களும், கோரிக்கைகளும் தற்போது மத்திய அரசின் செவிகளில் விழுந்து, அது நிறைவேறியும் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது.

Chennai Metro: 63,246 கோடி நிதி!

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்தது மெட்ரோ ரயில்கள். இன்னும் அதை விரிவுப்படுத்தலாம் என்றப்போது தான் மத்திய அரசின் ஒப்புதலும், நிதியும் கிடைக்காமல் சிக்கல் எழுந்தது. இருந்தாலும், தமிழ்நாடு அரசு இந்தப் பணியைத் தொடங்கி செயல்படுத்தியும் வருகிறது. கூடவே, இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு வைத்துக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் தான் நேற்று நடந்த மத்திய அமைச்சரவையில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளின் மொத்த நீளம் 118 கி.மீ. இதற்கான திட்ட செலவாக ரூ.63,246 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக 2027-ம் ஆண்டு முடிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது மூன்று தாழ்வாரங்களோடு அமைய உள்ளது.

திட்ட ஒதுக்கீடு!

மத்திய அரசு பங்கு: ரூ.7,425 கோடி (முதலீடு மற்றும் துணைக் கடன் உட்பட)

தமிழ்நாடு அரசின் பங்கு: ரூ. 22,228 கோடி (முதலீடு மற்றும் துணைக் கடன் உட்பட)

இருதரப்பு மற்றும் பன்முக பிரதானக் கடன்: ரூ.33,593 கோடி

மூன்று தாழ்வாரங்கள் எது?

மாதவரம் டு சிப்காட் – 50 ரயில் நிலையங்கள்; மொத்தம் 45.8 கி.மீ நீளம்.

கலங்கரை விளக்கம் டு பூந்தமல்லி நெடுஞ்சாலை 30 ரயில் நிலையங்கள்; மொத்தம் 26.1 கி.மீ நீளம்.

மாதவரம் டு சோழிங்கநல்லூர் – 48 ரயில் நிலையங்கள்; மொத்தம் 47 கி.மீ

Chennai Metro: எந்தெந்த இடங்களை இணைக்கிறது?

எந்தெந்த இடங்களை இணைக்கிறது?

இந்தத் திட்டத்தின் கீழ், மயிலாப்பூர், மாதவரம், பெரம்பூர், அடையாறு, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், சிப்காட், வடபழனி, வில்லிவாக்கம், அண்ணாநகர், போரூர், பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் வர உள்ளது.

இந்த மெட்ரோ ரயில் திட்டம் வெறும் போக்குவரத்தை மட்டும் குறைக்காமல், பல வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “நன்றி, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb