`மதுவிலக்கு; ஒன்றிய அரசு சட்டமியற்ற வேண்டும்..!’ – விசிக மது ஒழிப்பு மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்

கள்ளக்குறிச்சியில் விசிக மகளிர் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு பா.ம.க, பா.ஜ.க கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வீடியோ வெளியிட்டு பிறகு அதை நீக்கியது… “மது ஒழிப்பு வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் பேசும். ஆனால் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை” என திருமாவளவன் பேட்டியளித்தது என தொடர்ந்து அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது வி.சி.க.

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

அப்போதுதான் ‘வி.சி.க – தி.மு.க இடையே விரிசல் விழுந்திருக்கிறதா?’ என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

டி.கே.எஸ் இளங்கோவன்

அதன் அடிப்படையில், இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டி.கே.எஸ்.இளங்கோவன், “இந்த மாநாடு நடக்கவிருப்பதை அறிந்ததும், முதல்வர் ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து, எங்கள் கட்சி சார்பில் இருவர் கலந்துகொள்வார்கள் என அப்போதே எங்கள் பெயரையும் குறிப்பிட்டுக் கூறினார். இந்த மாநாட்டின் நோக்கம் மிக உயர்ந்த நோக்கம். அதற்கு துணை நிற்பது தி.மு.க-வின் கடமை என உணர்ந்துதான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. போதை சுயமரியாதைக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் நமது அண்டை மாநிலங்களில் மது விற்பனையில் இருந்தது. இங்கு மது கிடைக்காதவர்கள் அங்கு சென்று அதை அருந்தினார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் மது விலக்கு பூரணமாக நிறைவேற்றமுடியவில்லை. எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இதற்கான வெற்றியாக அமையும் என்பதை எங்கள் தலைவர் ஏற்றுக்கொண்டதால்தான் எங்களை பேச அனுப்பியிருக்கிறார். வி.சி.க-வின் இந்த மாநாட்டு தீர்மானத்தை படித்தபோது, போதை ஒழிப்பு பிரசாரத்துக்கென ஆட்களை தயார் செய்ய நிதியை அதிகப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசும் அந்த நிதியை அதிகப்படுத்த வேண்டும்.

விசிக மாநாடு

அந்த வகையில் முதல் கடமை மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும். இரண்டாவது அகில இந்திய அளவில் மதுவிலக்கை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும். எல்லா மதுக்கடைகளையும் மூடிவிட்டாலும், போதைப் பொருள் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்படுகிறது. குஜராத்தில் 2022-ல் 96 பேரும், பீகாரில் 140 பேர் போதையால் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இது அகில இந்திய பிரச்னை. எனவே ஒன்றிய அரசு இதற்காக சட்டமியற்ற வேண்டும். இந்த மாநாட்டின் தீர்மானத்தை வரவேற்கிறேன்” எனப் பேசினார்.