விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடத்தப்பட்டது.
கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அந்த மாநட்டின் அம்பேத்கர், புத்தர், மார்க்ஸ்,பெரியார் எனப் பலரின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அங்கே வைக்கப்பட்டிருந்த ராஜாஜியின் கட் அவுட் முக்கிய பேசுப்பொருளாக இருந்தது.
‘ராஜாஜியின் கட் அவுட் ஏன் வைக்கப்பட்டிருந்தது?’ எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் முகநூலில் இதுகுறித்த பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவில்
“விசிக மாநாட்டில் ராஜாஜி உருவம் (கட்-அவுட்டுக்குத் தமிழ்ச் சொல்?) இடம்பெற்றது நல்ல விஷயம். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து மதுவிலக்குக்காகவே ‘விமோசனம்’ இதழ் நடத்தியவர். 1939இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது முதன்முதலாகச் சேலம் மாவட்டத்தில் (நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்டவை அடங்கிய பழைய சேலம் மாவட்டம்) மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர்.
அவர் மேல் பிற காரணங்களால் விமர்சனம் இருப்பினும் மதுவிலக்கு தொடர்பாக நினைவுகூரத் தக்கவரே” என்று குறிப்பிட்டுள்ளார்.