இணையம் நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை எவ்வளவு எளிமையாக்கி இருக்கிறதோ… அதே வேளையில் அதில் ஆபத்துகளும் நிறைந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருவது அன்றாடம் கேட்கும் செய்தி என்றாகிவிட்டது. இதைப் போலவே பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி வாட்ஸ் அப் குழுவை பயன்படுத்தி இருவரிடம் ரூ.46 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
திருப்பூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (53). பனியன் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில், மறுமுனையில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசியுள்ளார். மேலும், அந்த நபர் அனுப்பிய லிங்க்கை ராஜசேகர் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து, ராஜசேகரை வாட்ஸ்அப் குழுவிலும் இணைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் பங்கு சந்தையில் லாபகரமான பங்குகளுக்கான பரிந்துரைகள் என அந்தக் குழுவில் யாதவ் என்பவர் பதிவிட்டு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ராஜசேகரை தொடர்பு கொண்ட யாதவ் தான் பரிந்துரைக்கும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ராஜசேகர் யாதவ் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.41.50 லட்சம் அனுப்பியுள்ளார். பல நாள்களாகியும் ராஜசேகருக்கு லாபம் எதுவும் கொடுக்கவில்லை. அந்த வாட்ஸ்அப் குழுவில் தனது லாப பணத்தை ராஜசேகர் கேட்டபோது யாதவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பிறகே மோசடி நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் திருப்பூர், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம் (29). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், உணவகங்களை மதிப்பாய்வு செய்து கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய ஞானசுந்தரம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரமும், திருப்பூரில் உள்ள உணவகங்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷனும் பெற்று வந்துள்ளார்.
சில நாள்கள் கழித்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய ஞானசுந்தரம் வாட்ஸ்அப் குழுவில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பணத்தை முதலீடு செய்த ஞானசுந்தரத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் குழுவில் ஞானசுந்தரம் கேட்டபோது, அந்த வாட்ஸ்அப் குழு உடனடியாக கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஞானசுந்தரம் அளித்த புகாரின்பேரில் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “தொழில் நகரமான திருப்பூரில் அதிக அளவில் தொழில் முனைவோர்கள் உள்ளனர். அவர்களைக் குறி வைத்துதான் வாட்ஸ்அப் குழு அமைத்து மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் அழைப்பது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது, அதற்கு பதிலளிப்பது தெரிந்தால், பின்னர் நேரடியாக தொடர்பு கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைப்பதுடன், அதற்காக பங்குச் சந்தை குறித்த தகவல்களை பகிர்வதை அந்தக் குழுவில் உள்ளவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதேபோல, உணவகங்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷன் தருவதாக கூறி தொடக்கத்தில் குறைந்த அளவு கமிஷன் தொகை தருகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என மோசடி செய்துவிட்டு குழுவை கலைத்துவிடுவது போன்ற செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. இது போன்று வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி முதலீடு செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றனர்.