NTK: “இதெல்லாம் நீ பேசக் கூடாது; இருப்பதானால் இரு’ என்பார் சீமான்’ – விலகிய விழுப்புரம் நிர்வாகி

நாம் தமிழர் கட்சி மீதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பல நேரங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்களாக பதவி வகித்த ராஜீவ் காந்தி தி.மு.க-விலும், கல்யாணசுந்தரம் அ.தி.மு.க-விலும் இணைந்தது முதல், ‘கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகள், சமூக படுகொலை ஆகியவற்றை கண்டதால், என்னால் இனி கட்சியில் பயணிக்க முடியாது” எனக் கூறி விலகிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் வரை சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றனர்.

சீமான் – ராஜீவ் காந்தி – கல்யாண சுந்தரம்

சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து வெளியேறிய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் கரு.பிரபாகரன், “கட்சியில் எவ்வளவோ நடக்கிறது. வலி தாங்க முடியவில்லை. ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்குதான் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் எளிமையான கட்சி எனக் கூறிக் கட்சி நடத்தும் சீமான் வீட்டில், 5 கார்கள் இருக்கிறது. 3 பேருக்கு 15 வேலை ஆட்கள், மாதம் 2.5 லட்சம் வாடகை என சொகுசாக வாழ்கிறார். சீமானுக்கு பின்னால் நின்று எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம். இனி யாரும் உங்கள் இளமையை அழித்து விடாதீர்கள்” எனக் கட்டமாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகுவதும், அவ்வப்போது, முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

இந்த நிலையில்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அபூ.சுகுமார் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்று, அபூ.சுகுமாரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “ஏறத்தாழ 9 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணித்தேன். செஞ்சியில் கட்சியை கட்டமைத்தது தொடங்கி, நகர செயலாளர் பொருப்பிலிருந்து தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர், 2021-ல் செஞ்சி தொகுதி வேட்பாளர், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் என கட்சிக்காக தொடர்ந்து உழைத்தும், பயணித்தும் வருகிறோம்.

அபூ.சுகுமார்

இந்த நிலையில்தன் விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தது. அதற்காக ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து, ஒரு வேட்பாளரை தேர்வு செய்து, அவர் தொடர்பான பணிகள், சேவைகள், திட்டங்கள், அவரால் கிடைக்கவிருக்கும் வாக்கு போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து சீமானிடம் தெரிவித்தோம். அப்போது அவர், “நீங்கள் சொல்லும் வேட்பாளரை எல்லாம் தேர்தலில் நிறுத்த முடியாது. நான் யாரை தேர்வு செய்கிறேனோ அவர்தான் வேட்பாளர்” என அபிநயாவை வேட்பாளராக அறிவித்தார். அப்போதே எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

“தேர்தல் அரசியல் முன்னெடுக்கிறோம் என்றால், வாக்கு வங்கி இருக்கும், அந்த தொகுதிக்குட்பட்ட வேட்பாளரை தானே நிறுத்த வேண்டும். மாற்று தொகுதியிலிருந்து புதிய ஒருவரை எப்படி தேர்தலுக்காக தேர்வு செய்யமுடியும்…” என கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர், “இதெல்லாம் நீ பேசக் கூடாது… எல்லாம் எனக்குத் தெரியும். இதுதான் என் முடிவு. யோசித்துதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன். எனவே தொடர்ந்து இருப்பதானால் இருங்கள்… இல்லையென்றால் சென்றுவிடுங்கள்” எனக் கூறினார். இந்த காரணங்களுக்காகதான் அபிநயாவை தேர்வு செய்தேன் எனக் எந்தக் காரணமும் எங்களுக்கு கூறவில்லை. அதையும் கடந்து விக்கிரவாண்டி தேர்தலுக்காக வேலை செய்தோம்.

அபூ.சுகுமார்

இதேபோன்று மற்றொரு முறை விவதமானபோதும், “இருப்பதானால் இருங்கள்… இல்லையென்றால் சென்றுவிடுங்கள்” எனக் கூறினார். அதற்குமேலும் எப்படி அங்கே பயணிப்பது… விழுப்புரம் மாவட்டத்தில் அபிநயாவை யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது அதே அபிநயாவை விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பாளராக அறிவிக்கிறார்.

சீமான் பொதுவாக எந்த பொறுப்பாளரிடமும் எதுவும் கேட்பதில்லை, எந்தப் பொறுப்பாளரையும் மதிப்பதில்லை, பொறுப்பாளராகளை பொருட்படுத்துவதே கிடையாது. கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலக இதுதான் காரணம். ஆனால், அவர் வரும்போதெல்லாம் மேடை முதல் பதாகைகள் வரை அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருக்க வேண்டும்.

இந்த வேலைகளுக்கெல்லாம் எங்கள் கையிலிருந்துதான் செலவு செய்கிறோம். அதற்கு கூட அவர் தரப்பிலிருது எதுவும் தருவதில்லை. பொதுக்கூட்டம் என்றால் அவர் வருவார், பேசுவார், சென்றுவிடுவார். அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் யார் என்பது கூட அவருக்குத் தெரியாது. கடந்த 6 மாதமாக எனக்குள் இருந்த அழுத்தம் காரணமாகதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன். நாங்கள் இருக்கும் மாவட்டத்தில் சாதியப் பிரிவினை என்ற சிக்கலெல்லாம் இல்லை. ஆனால் ஒருசில பதவிகளில் ‘இவரைதான் நியமிக்க வேண்டும்” எனக் கறாராக கூறுவார். அதற்கான காரணமெல்லாம் தெரியாது. கட்சியிலிருந்து விலகிய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் கரு.பிரபாகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைதான். அவர் அப்படிதான் இருப்பார்.” எனப் பேசி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88