சீட்டாட்ட கும்பலிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு; ஈரோடு காவலர் பணியிடை நீக்கம்! – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடசாமி. இதே காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வரும் இளங்கோவன் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாளவாடி பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் சீட்டாட்டக் கும்பலை இவர்கள் இருவரும் சுற்றி வளைத்துள்ளனர். போலீஸாரை கண்டதும் அந்த சீட்டாட்டக் கும்பல் சிதறி ஓடி உள்ளது.

அவர்களில் சிலரைப் பிடித்த வெங்கடசாமியும், இளங்கோவனும் சீட்டாட்டத்திற்காக வைத்திருந்த சில லட்சத்தை பறித்துக் கொண்டு அவர்கள்மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்ப விட்டுள்ளனர். பறிமுதல் செய்த பணத்தை அவர்களே பங்கிட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஜவஹருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

காவல் துறை

முதற்கட்ட விசாரணையில் சீட்டாட்ட கும்பலிடமிருந்து சிறப்பு எஸ்.ஐ வெங்கடசாமி, சிறப்பு பிரிவு காவலர் இளங்கோவன் இருவரும் பணம் பறித்தது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடசாமி, இளங்கோவன் ஆகிய இருவரையும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து எஸ்.பி ஜவகர் உத்தரவிட்டார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதில், காவலர் இளங்கோவன் சீட்டாட்ட கும்பலிடம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். காவலர் ஒருவரே சீட்டாட்ட கும்பலிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது, ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.