மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே ஒரு முறை மகாராஷ்டிராவிற்கு வந்து கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றார். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இரண்டு நாள் பயணமாக மும்பை வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இப்பேச்சுவார்த்தையில் ஒரு மித்த கருத்து எடுக்கமுடியவில்லை.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டெ மற்றும் துணைத் முதல்வர் அஜித்பவார் ஆகியோர் தனித்தனியாக அமித் ஷாவை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது பிரச்னைக்குரிய தொகுதிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
பெரும்பாலான தொகுதிகளுக்கு ஆலோசனை செய்து முடிவு எடுத்து விட்டதாகவும், எஞ்சிய தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ.க 150 முதல் 155 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே எஞ்சிய 133 தொகுதிகளைத்தான் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் பகிர்ந்து கொள்ளவேண்டும். சில தொகுதிகளுக்கு மூன்று கட்சிகளும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் போன்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் செய்யவேண்டாம் என்று அமித் ஷாவிடம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 150 முதல் 155 தொகுதியிலும், சிவசேனா 90 முதல் 95 தொகுதியிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 40 முதல் 45 தொகுதியிலும் போட்டியிடும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தொகுதி பங்கீட்டை முடித்துவிடுவோம் என்றும், இன்னும் 25 தொகுதிகள் குறித்துதான் முடிவு செய்யவேண்டியிருக்கிறது என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அஜித்பவார்தான் தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று கோரி போராடிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அஜித்பவாருக்கு செல்வாக்கு பெரிய அளவில் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பா.ஜ.க, தற்போது அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பளிக்க பரிசீலித்து வருகிறது. இது அஜித்பவாருக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அஜித்பவாருக்கு பெரிய அளவில் தோல்வி ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அவருக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க பா.ஜ.க தயக்கம் காட்டி வருகிறது. சிவசேனா (உத்தவ்) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் தொகுதிபங்கீடு இழுத்துக்கொண்டே செல்கிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சிவசேனா (உத்தவ்) தங்களுக்கும் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பதால் தொகுதி பங்கீட்டை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடிகாரம் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சரத்பவார் தாக்கல் செய்திருக்கும் மனு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கடிகாரம் சின்னம் அஜித்பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதாகவும் சரத்பவார் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே பிரச்னைக்கு தீர்வு காணும் வரை அஜித்பவார் அணிக்கு தனிச்சின்னம் ஒதுக்கவேண்டும் என்று சரத்பவார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது.
இம்மனு மீது தேர்தல் வேட்பு மனுத்தாக்ல் தொடங்குவதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட் இறுதி முடிவு எடுக்கும்பட்சத்தில் அதுவும் அஜித்பவாருக்கு எதிராக திரும்பும் அபாயம் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2022-ம் ஆண்டும், அஜித்பவார் தலைமையில் 2023-ம் ஆண்டும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்தன. இதையடுத்து எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் தலைமையிலான அணிகளை உண்மையான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்ததுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group, இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…