பினராயி விஜயனுக்குக் குடைச்சல் கொடுக்கும் சி.பி.எம் ஆதரவு எம்.எல்.ஏ! – யார் இந்த பி.வி.அன்வர்?

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்த பி.வி.அன்வர், கடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். சி.பி.எம் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த பி.வி.அன்வர் கடந்த சில வாரங்களாக முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அதிரடியாக பேசிவருகிறார். ஆரம்பத்தில் போலீஸ் ஏ.டி.ஜி.பி அஜித்குமார் அதிக சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை ரகசியமாக சந்தித்ததாகவும் குற்றம்சாட்டினார். அடுத்ததாக, முதல்வர் பினராயி விஜயனின் அரசியல் செயலாளர் சசி குறித்து விமர்சித்தார். உண்மை நிலவரங்கள் பற்றி முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு சசி கொண்டுசெல்வதில்லை என்றார். பி.வி.அன்வரின் செயல்பாடுகளை சி.பி.எம் விமர்சித்தது. ஆனாலும், பி.வி.அன்வர் தொடர்ச்சியாக பினராயி விஜயனை விமர்சித்து வருகிறார். கோழிக்கோடு மற்றும் நிலம்புரில் பொதுக்கூட்டங்களை நடத்தி பினராயி விஜயனுக்கு எதிராக பேசி வருகிறார். பி.வி.அன்வர் பேசும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக செல்வதும் பேசுபொருளாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் பி.என்.அன்வர் தெரிவித்துள்ளார்.

பி.வி.அன்வர் எம்.எல்.ஏ

இதற்கிடையே டெல்லியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பி.வி.அன்வரின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து மலப்புறத்துக்கு வரும் ஹவாலா பணமும், கடத்தல் தங்கமும் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறியிருந்தார். முதல்வரின் கருத்துக்கு பி.வி.அன்வர் மட்டுமல்லாது மலப்புறம் மாவட்டத்தில் பலமாக உள்ள முஸ்லிம் லீக் கட்சியும் கண்டனம் தெரிவித்திருந்தது. மலப்புறத்தை முதல்வர் பினராயி விஜயன் அவமானப்படுத்தி விட்டதாக முஸ்லிம் லீக் கூறியிருந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

மலப்புறம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பினராயி விஜயனின் நேர்காணலை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. விவாதத்துக்குரிய பகுதியை பி.ஆர்.ஏஜென்சி  அளித்ததாகவும், அதை பிரசுரித்ததில் தங்களின் கவனக்குறைவு ஏற்பட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சி.பி.எம் ஆதரவுடன் வெற்றிபெற்ற ஒரு எம்.எல்.ஏ-வால் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் ஏற்பட்டுள்ளது, கேரள அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. அதே சமயம் சி.பி.எம் ஆதரவு எம்.எல்.ஏ-வான பி.வி.அன்வரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.