சட்ட விரோத பணச் சலவைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியில் வந்த மூன்றாவது நாளே அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். அதுவும் அவர் சிறைக்குச் செல்லும் முன்பு கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கே மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
கிட்டத்தட்ட 15 மாதங்கள், அதாவது 471 நாள்களுக்கு சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு, ‘வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன்தான் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
எனவே, அமைச்சரவையில் இடம் கொடுத்ததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். ஆனால், முதல்வரோ, “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி” என்பதில் தொடங்கி, “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என வரவேற்றதோடு, “செந்தில் பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம்” என விமர்சித்தவர்களையும் விமர்சித்துக் கடிதம் எழுதினார்.
இந்தச் சூழலில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. எனவே சாட்சியை கலைக்கமாட்டார் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிவிட்டார். எனவே ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா, “ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள்” எனச் சொன்னதோடு, தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பவர்களில் யார்மீதெல்லாம் வழக்குகள் இருக்கின்றன” என்ற விவரத்தையும் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே ஏன் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினார்கள். தி.மு.க தலைமை அவசரம் காட்டியது ஏன்?
“செந்தில் பாலாஜிக்காகத்தான் அமைச்சரவை மாற்றமே இவ்வளவு தாமதமாக நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டதும் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த போதே, துறைகளை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுத்துவிட்டு, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதித்தார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவையில் நீடிப்பதே அவருக்கு ஜாமீன் கிடைக்க, தடையாக இருந்தபோதுதான் அவர் தனது அமைச்சர் பொறுப்பையே ராஜினாமா செய்தார். எனவே, இப்போதல்ல, தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்துதான் வருகிறார்.
கட்சியில் சேர்ந்தது முதல் செந்தில் பாலாஜி தனக்கான இடத்தை வலுப்படுத்திக்கொண்டே சென்றார். தேர்தலில் அவரின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வீக்காக இருந்த கோவையில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்ததும் செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமானது. அதையடுத்து வந்த ஈரோடு இடைத்தேர்தலிலும் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மிக முக்கியமானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் பிரசாரம் செய்த முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் செந்தில் பாலாஜியைத் தூக்கி வைத்துதான் பேசினார்கள். தி.மு.க-வை கொங்குப் பகுதியில் வளர்க்க செந்தில் பாலாஜி தேவை என தி.மு.க நம்பியது. அதற்காகவே அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, தங்களை நம்பி வந்தவரைக் கைவிட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் தலைமையிடம் இருக்கிறது. எனவே தான் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வந்ததும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறது தலைமை” என்றவர்கள்..
“கட்சிக்குள்ளேயே செந்தில் பாலாஜி விவகாரத்தில் தலைமை கொஞ்சம் அவரசப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியில் இருக்கும்போது அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. இப்போது நீதிமன்றமே ஜாமீனை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. அப்படி மனுத்தாக்கல் செய்து ஜாமீன் ரத்தானால் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியது வரும். அது மட்டும் அல்லாமல், வாரம் இரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும். விசாரணைக்கும் ஆஜராக வேண்டும். இப்போது அமைச்சராக ஆஜராகி கையெழுத்திடுவது கட்சிக்கும் தானே அவப்பெயர். எனவே, நிபந்தனைகள் எல்லாம் நீக்கப்பட்ட பிறகு பொறுமையாக அமைச்சராக்கியிருக்கலாம்.” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88