`தனது மகள்களுக்கு மட்டும் திருமணம் செய்துவைத்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜக்கி வாசுதேவை நோக்கி கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
காமராஜ் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.
வழக்கு பின்னணி:
கோவை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.காமராஜ் (69) என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். அதில், ” 42 வயதுடைய கீதா மற்றும் 39 வயதுடைய லதா இருவரும் என் மகள்கள். அவர்கள் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்று அங்கேயே தங்கிவிட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம், கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளியே தங்கி இருக்க வேண்டும், அதன்பின் அவர்களின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.
சிவில் வழக்கு தொடர்ந்த மகள்கள்:
தொடர்ந்து, `எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக தானும் தனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தபடுவதாக தெரிய வருகிறது. ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தான் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என இரண்டாவது மகள் மூலம் நிர்பந்திக்கிறார்கள்.’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்றும், அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இரு மகள்களை மீட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காமராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
`எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை’
கீதா, லதா ஆகிய காமராஜின் மகள்கள் இருவரும் நேற்று டிவிஷன் பெஞ்ச் முன் ஆஜராகி, கோவை வெள்ளிகிரி மலையடிவாரத்தில் உள்ள யோகா மையத்தில் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருந்ததாகவும், தங்களை யாரும் விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கவில்லை என்றும் எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்:
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெற்றோர்கள் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் முற்றும் துணிந்த ஞானிகளான பின் அதை ஏன் பொருட்படுத்துகிறீர்கள்” என்று கேட்டனர். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தைப் பார்த்த நீதிபதிகள், தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசிகளாக ஆக்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
ஈஷா மையத்தில் உள்ள பெண்கள் இருவரும் இதில் வாதங்களை வைக்க முற்பட்டபோது,பெஞ்சில் உள்ள மூத்த நீதிபதி , நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்வதாகக் கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோரைப் புறக்கணிப்பது பாவம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே என்பது பக்தியின் கொள்கை, ஆனால் உங்கள் பெற்றோரின் மீது உங்களுக்குள்ள வெறுப்பை எங்களால் பார்க்க முடிந்தது. நீங்கள் அவர்களை மரியாதையுடன் கூட பேசவில்லை, என்று கடிந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. இதுகுறித்து பல சந்தேகங்கள் உள்ளது” என தெரிவித்தனர். பின்னர் ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை வரும் 4 ஆம் தேதி காவல்துறை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…